`இனி, செயலி மூலமும் பைக் டாக்ஸி சேவையைப் பெறலாம்!’ - மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை மாஉலா | new app introduced for maaulaa bike taxi

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (19/01/2019)

`இனி, செயலி மூலமும் பைக் டாக்ஸி சேவையைப் பெறலாம்!’ - மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கை மாஉலா

மாற்றுத்திறனாளிகளால் செயல்படுத்தப்பட்டுவரும் மாஉலா என்ற இரு சக்கர வாகன டாக்ஸி (Bike Taxi) சேவை, அதன் மற்றொரு மைல் கல்லாக, புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் மாஉலா டாக்ஸி சேவையில், சென்னையில் மட்டும் 32 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. பொதுமக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சேவையின், Maaulaa என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மாஉலா புதிய செயலி

செயலியை அறிமுகம் செய்தது குறித்து மாஉலா நிறுவனத்தின் உரிமையாளர் முகமது கடாஃபி கூறும்போது,"மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாஉலா தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடையே தன்னம்பிக்கையை அதிகரித்து, மாதம்தோறும் அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகை வருமானம் வர வேண்டும். அவர்களும் எல்லா மனிதர்களைப் போன்று இயல்பாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், மாஉலா செயல்பட்டுவருகிறது. 

ஆனாலும், வாடிக்கையாளர்களிடம் நேரடியாகச் சென்று பேசி, சவாரிக்கு ஆள்களை அழைப்பதற்கு மாற்றுத்திறனாளிகளிடையே நிறைய தயக்கம் இருக்கிறது. அதைப் போக்குவதற்காகவே இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலியின்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக புக்கிங் கிடைக்கும். மேலும், சவாரி புக் செய்பவர்களின் இடத்தைக் கண்டறியவும் செயலி  உதவிகரமாக இருக்கும்" என்றார். 

மாஉலா

தஞ்சாவூர் மற்றும் மதுரையில், இம்மாத இறுதியில் மாஉலா தனது சேவையைத் தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து திருநெல்வேலி, வேலூர், கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் மாஉலா சேவை தொடங்க உள்ளது.