"அமைச்சரைச் சந்தித்ததால் அ.தி.மு.க-வுடன் தொடர்பாகி விடுமா?" - ஜெயராம் வெங்கடேசன் | "I met TN minister Thangamani also; but they are not mentioning it" Arappor Iyakkam Jayaram venkatesan

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (19/01/2019)

கடைசி தொடர்பு:19:06 (19/01/2019)

"அமைச்சரைச் சந்தித்ததால் அ.தி.மு.க-வுடன் தொடர்பாகி விடுமா?" - ஜெயராம் வெங்கடேசன்

"இப்போதைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணியையும் நாங்கள் சந்தித்து  'நிலக்கரி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தோம். அப்படி என்றால் அ.தி.மு.க-வுடன் எங்களுக்குத் தொடர்பு என்று அர்த்தமா? அதை ஏன் அவர்கள் சொல்லவில்லை?"

.தி.மு.க அரசின் ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது அறப்போர் இயக்கம். குறிப்பாக, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல், எஸ்.பி. வேலுமணியின் டெண்டர் முறைகேடு, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் ஆதாரங்களுடன் முறைகேடுகளை அம்பலப்படுத்தியது. அதோடு இல்லாமல் இந்த ஊழல்கள் குறித்து விசாரித்துச் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தலைமைச்செயலாளருக்கு புகார் மனுக்களையும் அறப்போர் இயக்கம் அனுப்பியுள்ளது. 

 அ தி மு க அரசின் ஊழல் - ஜெயராம் வெங்கடேசன் - முத்தரசன்

குட்கா ஊழல் புகார் குறித்து மட்டும் சி.பி.ஐ விசாரிக்கும் நிலையில், மற்ற ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அறப்போர் இயக்கம். அந்த வழக்குகளின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்த இயக்கத்தின் மீது அ.தி.மு.க அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜெயராம் வெங்கடேசன் அறப்போர்  இயக்கம் - தொல். திருமாவளவன்

அதன் ஒரு பகுதியாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனுக்கும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார் அமைச்சர் தங்கமணி. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அமைச்சர் தங்கமணி, "தி.மு.க. ஆதரவுடன்தான் அறப்போர் இயக்கம் செயல்படுகிறது" என்றார். இதேபோல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், "ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செல்வாக்கில்தான், அறப்போர் இயக்கம்  இயங்குகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையே, தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சந்தித்துப் பேசியதாகவும், இதுவே அவர்கள் சந்தித்த புகைப்படம் என்றும் கூறி அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட  புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர்களின் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து ஜெயராம் வேங்கடேசனிடம் பேசிய போது, "லோக் ஆயுக்தா வரைவு அறிக்கை தருவதற்காக கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர்களை அப்போது சந்திக்க முடியவில்லை. அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் நடக்கும் ஊழல்களைத் தொடர்ந்து எங்கள் இயக்கம் அம்பலப்படுத்தி வந்தது. அதில் நிலக்கரி ஊழலை உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அந்த ஊழலில் தொடர்புடைய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் மின்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சிலரையும்  விசாரிக்கவேண்டும் என்று கூறியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஜெயராம் வெங்கடேசன் அறப்போர்  இயக்கம் - அன்புமணி பா.ம.க

இதையடுத்தே, தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரைச் சந்தித்து, 'அமைச்சர்களின் மீதான ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, நீங்கள் அழுத்தம் தரவேண்டும்' என்று வலியுறுத்தினோம். அப்போது ஸ்டாலினைச் சந்தித்த அந்தப் புகைப்படங்களை வைத்து, தற்போது என் மீது பொய்யானக் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அதுபோன்றக் கட்டுக்கதைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

ஆரம்பத்தில் பொய் வழக்கு போட்டு உள்ளே அடைக்க முயற்சி செய்தார்கள் .அது செல்லுபடியாகவில்லை என்பதால் தற்போது இப்படியான அற்பமான விஷயங்களைக் கையிலெடுத்துள்ளனர். குறிப்பாக, இந்தப் பிரச்னையில் முக்கியமாகச் சொல்லவேண்டியது, இப்போதைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணியையும் நாங்கள் சந்தித்து  'நிலக்கரி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தோம். அப்படி என்றால் அ.தி.மு.க-வுடன் எங்களுக்குத் தொடர்பு என்று அர்த்தமா? அதை ஏன் அவர்கள் சொல்லவில்லை?" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்