`தண்ணீருக்கான முக்கியத்துவம் என்ன?' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு! | People registers their signatures to support Ecological festival of Western Ghats

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (19/01/2019)

கடைசி தொடர்பு:20:20 (19/01/2019)

`தண்ணீருக்கான முக்கியத்துவம் என்ன?' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு!

மேற்கு மழையே தென்னிந்தியாவில் வாழும் நம் அனைவருக்கும் வாழ்வாதாரமான தாய். நமக்கு மட்டுமல்ல, எதிர்வரும் நம் தலைமுறைக்கும் அம்மா இந்த மலைதான். இவளை காக்கத் தவறினால் நம் சந்ததி தண்ணீரற்ற பாலைவனத்தில் பரிதவிக்க நேரிடும். ஆம், அம்மாவைப் பாதுகாக்கத்தான் இந்த மாநாடு.

குஜராத்திலிருந்து குமரி வரை ஆறு மாநிலங்களில் பரவியுள்ள மிகப்பெரும் பல்லுயிர்ச்சூழல், மேற்குத்தொடர்ச்சி மலை. 1600 கி.மீ நீளத்துக்குப் பரவியுள்ளது. உலகின் முக்கியமான பல்லுயிர்ச்சூழல் நிறைந்த மலைப்பகுதி. அதில் வாழும் பல வகையான உயிரினங்கள் மற்றும் மக்களின் நலன்களையும், அதைச் சார்ந்துள்ள ஆறு மாநிலங்களின் நலன்களையும் எடுத்துரைக்க நடக்கப் போவதே, மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு.

வருகின்ற  பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டுக்காக, அந்த நிலவியலைச் சார்ந்துள்ள மக்களிடம் கையெழுத்து நிகழ்ச்சி, கடந்த நான்கு நாள்களாக நீலகிரி மற்றும் கோவையில் நடத்தப்பட்டது. 

மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாடு

15-ம் தேதி பொங்கல் அன்று உதகை தாவரவியல் பூங்காவில் இருந்து தொடங்கிய இந்நிகழ்ச்சி, நேற்று (18-01-2019) வரை நடந்தது. அதே சமயத்தில்,இதை  கோவையில் 'ஓசை' அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் ஒருங்கிணைக்க, இரண்டு பகுதிகளிலும் சிறப்பாக நடந்தது. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தலைமையேற்று, கையெழுத்துப் பலகையில் முதல் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அனைவரும் கையெழுத்திட்டனர். பொதுமக்களும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுமாகச் சேர்த்து, ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டவர்கள், தங்கள் ஆதரவை கையெழுத்தாகப் பதிவுசெய்தனர். அதோடு, மேற்குத்தொடர்ச்சி மலையின் பிள்ளைகளான தோடர், படுகர், குறும்பர் போன்ற பல்வேறு பழங்குடி மக்களும் நூற்றுக்கணக்கில் கூடி, கையெழுத்திட்டுத் தங்கள் ஆதரவைப் பதிவுசெய்தனர். ஒருநாள் இடைவெளிவிட்டு, மீண்டும் நேற்று அரசு கலைக் கல்லூரியில் நடத்தியபோது, கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. ஈஸ்வரமூர்த்தி, முதல் கையெழுத்திட்டுத் தொடங்கிவைக்க 57 பேராசிரியர்களும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பதிவுசெய்தனர். 

கையெழுத்துப் பதிவு

இதுதொடர்பாக, இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஓசை அமைப்பைச் சேர்ந்தவரும் உயிரியல் பேராசிரியருமான முனைவர் ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம், "மக்கள் அனைவரும் அதற்கு வரமுடியுமா என்ற கேள்வி இருக்கிறது. அதனால், இந்த மாநாட்டுக்கு மக்களின் ஆதரவு குறித்துத் தெரிந்துகொள்ள நடத்தியதே இந்த கையெழுத்துப் பதிவு. தாவரவியல் பூங்கா, அரசு கலைக்கல்லூரி, கிரெஸண்ட் பள்ளி ஆகிய இடங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.

"இது, தென்னிந்தியாவின் தண்ணீருக்கான மாநாடு. இந்த மலையை சுற்றுலாத் தளமாகப் பார்க்கக் கூடாது. இதை நீருக்கான மூலாதாரமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம். இந்தச் செய்தியைப் பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டுசேர்க்கவும், அவர்களின் ஆதரவைத் தெரிந்துகொள்ளவும் முயன்றுவருகிறோம். அதில் ஒருவழிதான் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியான இந்தக் கையெழுத்துப் பதிவு" என்றார், ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ்.