சிறைக்குச் சென்றும் திருந்தாத வாலிபர்! - மீண்டும் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைப்பு | youth arrest by pocso Act

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (19/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (19/01/2019)

சிறைக்குச் சென்றும் திருந்தாத வாலிபர்! - மீண்டும் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர், ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் வேறொரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மீண்டும் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆருண் (25). கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஷகிரா (பெயர் மாற்றம்) என்ற 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, திருவொற்றியூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஆருண், போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த ஆருண், பெற்றோர்களுடன் இருந்துவந்தார். 'சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களைப் பார்ப்பதற்கே கூச்சமாக இருக்கிறது' என பெற்றோர்களிடம் ஆருண் புலம்பினார். மகன் தவறான முடிவை எதுவும் எடுத்துவிடக் கூடாது. அவர் திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என நினைத்த பெற்றோர்கள், செங்கல்பட்டு அருகே உள்ள மல்ரோசாபுரத்தில் உள்ள உறவினர் சபீனா பேகம் என்பவரது வீட்டில் தங்க வைத்தனர்.

சபீனா பேகத்தின் கணவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். சபீனா பேகத்திற்கு வாய் பேசமுடியாத மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது பெண் குழந்தை இருக்கிறார்.  குடும்ப வருமானத்திற்காக அதே பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்துப் பிழைப்பை நடத்திவருகிறார். உறவினர்கள் வற்புறுத்தவே, ஆரூணுக்கு தனியாக ஒரு வீடு பார்த்து வைத்தார். ஆரூண் வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே பொழுதைக் கழிப்பார். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த தனது ஒன்பது வயதுக் குழந்தையை ஆரூணிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார் சபீனா. அப்போது, அருகில் உள்ள முட்புதர் அடங்கிய பகுதிக்கு அந்தச் சிறுமியை அழைத்துச்சென்ற ஆரூண், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உடம்பில் காயங்களோடு இருந்த அந்தச் சிறுமியைக் கொலைசெய்ய முயற்சிக்கும்போது அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அந்தச் சிறுமியை மீட்டனர்.

பின்பு, குடிபோதையில் இருந்த ஆரூணை மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர், அந்தச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஆரூண், போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க