`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்! | government school teacher commits suicide with his family in kovai

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:04:30 (20/01/2019)

`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்!

தாய், மனைவி மற்றும் குழந்தைகளோடு அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

தற்கொலை செய்த ஆசிரியர்

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர், அந்தோணி ஆரோக்கியதாஸ். 38 வயதான இவர், திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கருமத்தம்பட்டியில் அவர் குடியிருந்த வீட்டில் அந்தோணி ஆரோக்கியதாஸ் அவரது  மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தாய் புவனேஸ்வரி என ஒட்டுமொத்த குடும்பமும் சடலமாக மீட்கப்பட்டனர். இதில், அந்தோணி ஆரோக்கியதாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றவர்கள் உடல் விஷம் அருந்தி உயிர் நீத்த நிலையிலும் இருந்தது. 5பேரின் உடல்களையும் கைப்பற்றிய கருமத்தம்பட்டி காவல்துறையினர் நடத்திய  விசாரணையில், அந்தோணி ஆரோக்கியதாஸ் எழுதிய கடிதம் சிக்கியது. 

அதில், "எங்கள் சாவிற்கு யாரும் காரணமில்லை. என் முதுகுவலிதான் காரணம். 12 வருடம் சித்ரவதைப்பட்டுவிட்டேன். இப்போது முடியாத நிலையை எட்டிவிட்டது. என் குடும்பத்தை இந்த உலகில்விட முடியாது. எனவே அவர்களையும் கூட்டிச் செல்கிறேன். என் மனைவி குழந்தைகள் என் உயிர். எப்படி விட முடியும்? எவ்வளவு முயற்சி செய்தும் என் முதுகுவலி குறையவே இல்லை. கடன் ஏறியதுதான் மிச்சம். எனக்குக் கடன் கொடுத்தவர்கள் தயவு செய்து என்னை மன்னியுங்கள். என்னால் இயலாத நிலையில் தான் செல்கிறேன்" என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க