‘மளிகைப் பொருள் குடோனில் பயங்கர தீ!’ - துரிதமாகச் செயல்பட்ட வேலூர் தீயணைப்பு வீரர்கள் | Terrible fire on groceries store in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/01/2019)

கடைசி தொடர்பு:07:00 (20/01/2019)

‘மளிகைப் பொருள் குடோனில் பயங்கர தீ!’ - துரிதமாகச் செயல்பட்ட வேலூர் தீயணைப்பு வீரர்கள்

வேலூரில், மளிகை பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

மளிகை பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை அருகே உள்ள தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் பின்புறத்தில் சரவணன் என்பவரின் ‘கிருஷ்ணா ஏஜென்சி’ என்கிற மொத்த வியாபார பல சரக்கு குடோன் உள்ளது. இங்கு நெய், எண்ணெய், பிஸ்கட், பேரீச்சைப் பழம், சாக்லெட் உட்பட பல்வேறு மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள். நேற்றிரவு வழக்கம் போல் குடோனை பூட்டி விட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். 

இன்று அதிகாலை (19-ம் தேதி) குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், வேலூர், காட்பாடி மற்றும் ஆற்காடு ஆகிய பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சம்பவ பகுதி மிகவும் குறுகலானவை என்பதால், தீயணைப்பு வாகனங்களை உள்ளே கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. 

மளிகை பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ

ஆட்டோக்கள், பைக்குகள் எனப் பாதையை மறித்து நிறுத்தப்பட்டிருந்த அத்தனை வாகனங்களையும் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்திவிட்டுத் தீயணைப்பு வாகனங்களை, குடோன் அருகே கொண்டு சென்றனர். பல சரக்கு குடோனுக்குள் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்ததால், ஜே.சி.பி எந்திரம் மூலம் குடோனின் பக்கவாட்டு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு, அதன் வழியாகத் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 

சுமார் 4 மணி நேர இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில், குடோனில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தீக்கிரையாகின. முதற்கட்ட விசாரணையில், கட்டடத்தின் உட்புறப் பகுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி, வேலூர் வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.