`அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்க அதிகாரம் இல்லை' - நீதிபதி ஏ.கே.சிக்ரி! | supreme court judge speaks about Constitutional

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:07:30 (20/01/2019)

`அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்க அதிகாரம் இல்லை' - நீதிபதி ஏ.கே.சிக்ரி!

ட்சியில் இருப்பவர்கள் அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் உரிமை தந்துள்ளது. ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு சீர்குலைக்க உரிமை கிடையாது என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தெரிவித்தார் 

ஏ கே சிக்ரி

குமரி மாவட்டத்தின் நலனுக்காகச் செயல்படும் குமரி மகாசபா அமைப்பின் 6-வது ஆண்டுவிழா இன்று நாகர்கோவிலில் நடந்தது. இதற்கு குமரி மகாசபா தலைவர் வழக்கறிஞர் ராவின்சன் தலைமைவகித்தார். இதில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி பேசுகையில், "இந்தியாவில் ஜனநாயக முறை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. உலகில் உள்ள 80 சதவீத நாடுகள் ஜனநாயக முறையைப் பின்பற்றுகின்றன. மக்கள் தேர்தல் மூலம்  தேர்வு செய்பவர்கள் எந்த மாதிரியான ஆட்சி புரிகிறார்களோ அதைப் பொறுத்துத்தான் ஜனநாயகம் அமையும். ஜனநாயகம் தழைத்தோங்க மக்களின் முழுமையான பங்களிப்பு முக்கியம். ஜனநாயகத்தில் 4 தூண்களாக நாடாளுமன்றம், அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் ஆகியவை விளங்குகின்றன. இன்று ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. யாருடைய தலையீடும் இல்லாமல் இருப்பதுதான் சக்தி வாய்ந்த ஊடகங்களாகும். மக்களால்  பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்படும் கட்சிக்கு ஆட்சி புரிய உரிமை உண்டு, அவ்வாறு ஆட்சியில் இருப்பவர்கள் அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் உரிமை தந்துள்ளது. ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு சீர்குலைக்க உரிமை கிடையாது.

 

ஏ கே சிக்ரி

இந்தியா சுதந்திரம் பெற்று 72  ஆண்டுகளாகி விட்டன. இத்தனை ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் நமது நாடு முன்னேற்றம் கண்டாலும், பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலானோருக்குச் சுத்தமான குடிநீர் வழங்க முடியவில்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், வரதட்சணை உயிரிழப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல், தீவிரவாதம் போன்ற பலவற்றைக் கூறலாம். இந்தியா மட்டுமல்ல பல நாடுகளில் இந்த பிரச்னைகள் உள்ளன. இவற்றை எப்படித் தவிர்ப்பது,  எவ்வாறு களைவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

 

ஏ.கே.சிக்ரி

பிரதமர் முதல் கடைநிலை ஊழியர் வரை சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஒரு அரசு அதிகாரி 20 முதல் 30 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலும், அவர் ஒரு நாள் பணிக்கு 5 நிமிடம் காலதாமதமாக வந்தால் அவரைத் தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் உறுதிப்படுத்துவதும்  அவசியமாகும். சமூகத்துக்கும், சட்டத்துக்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கும் வகையில்  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைவது அவசியம்" என்றார்.