‘வேலூர் சி.எம்.சி மருத்துவமனை பெயரில் தொடரும் மோசடி’ - 85 பேரை ஏமாற்றிய நபர் கைது! | A man who cheated 85 people was arrested in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (20/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (20/01/2019)

‘வேலூர் சி.எம்.சி மருத்துவமனை பெயரில் தொடரும் மோசடி’ - 85 பேரை ஏமாற்றிய நபர் கைது!

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 85-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.62 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சி.எம்.சி மருத்துவமனை

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி மருத்துவமனையில், வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்யும் கும்பல் அதிகளவில் சுற்றித்திரிகின்றனர். இவர்களிடம், பலர் அடிக்கடி ஏமாறுவதும், போலீஸில் புகார் அளிப்பதும் தொடர்கிறது. வாலாஜாபேட்டை அடுத்த பூண்டியைச் சேர்ந்த 8 பேரிடம் சி.எம்.சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பவர், கடந்த டிசம்பர் 30-ம் தேதி போலீஸில் பிடிபட்டார்.

மோசடி நபர்

இந்த நிலையில், சி.எம்.சி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 85-க்கும் மேற்பட்டோரிடம், பழைய காட்பாடி ஈசன் ஓடை ராயல் நகர் மோட்டூரைச் சேர்ந்த ஏகபாதம் மகன் ஜான் கென்னடி (45) என்பவர் சுமார் ரூ.62 லட்சம் வாங்கியுள்ளார். வேலை வாங்கித் தராமல், பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்டவர்கள், வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி (பொறுப்பு) ஜெயசுப்பிரமணியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் புஷ்பலதா, கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, தலைமறைவாக இருந்த ஜான் கென்னடியை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.