‘விடுதலைப் பரிந்துரையை ஆளுநர் உடனே ஏற்கனும்!’ -வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் | Rajiv Gandhi assassination convict Murugan on hunger strike in Vellore jail

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (20/01/2019)

கடைசி தொடர்பு:11:20 (20/01/2019)

‘விடுதலைப் பரிந்துரையை ஆளுநர் உடனே ஏற்கனும்!’ -வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேர் விடுதலைத் தொடர்பான பரிந்துரையை ஆளுநர் உடனே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் உள்ளார். 

முருகன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரை கடிதம் தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை. ஏழு பேரின் விடுதலைத் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். இதனால் சிறையில் உள்ளவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

வேலூர் சிறை

 
இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியை, நேற்று காலை சந்தித்துப் பேசினார். நீதிமன்ற உத்தவுபடி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கும் வழக்கமான சந்திப்பு தான். ஆனாலும், விடுதலை ஏக்கத்தில் இருப்பதால், சமீப காலமாக அவர்களின் சந்திப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டு வருகிறது. நளினியைச் சந்தித்து விட்டு, ஆண்கள் சிறைக்கு திரும்பிய முருகன், திடீரென உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

‘ஏழு பேர் விடுதலைப் பரிந்துரையை ஆளுநர் உடனே ஏற்க வேண்டும்’ என்று வலியுறுத்தி சிறையில் வழங்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடாமல், இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘‘சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருப்பது எனக்கு தற்போது தான் தெரியும். முன்னதாக நளினி-முருகனைச் சந்தித்தபோது, இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். விடுதலைத் தொடர்பாக தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கு தொடரலாம் என்று நம்பிக்கை அளித்துவிட்டு வந்தேன்’’ என்றார்.