நாகையில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி ஆய்வு - பிரபல பேக்கரிக்கு எச்சரிக்கை | Food Security Officer Inspection in Nagapattinam

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (20/01/2019)

கடைசி தொடர்பு:12:20 (20/01/2019)

நாகையில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி ஆய்வு - பிரபல பேக்கரிக்கு எச்சரிக்கை

பேக்கரி


நாகை மாவட்டம், வெளிப்பாளையம் மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு பிரபல பேக்கரியில் உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படவில்லை, மேலும் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லை என்று நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகனிடம் புகார் அளிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த உணவு நிறுவனம் அலுவலரால் நேரடி ஆய்வு செய்யப்பட்டது.

பேக்கரி

 ஆய்வில் உண்மையில் அந்த பேக்கரியில் குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருப்பதும்,  உணவு தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் ஈக்கள், தூசிகள் அதிகம் இருந்ததும், கழிவறை வசதிகள் சரிவர  இல்லாமல் இருந்ததும், உணவைக் கையாளும் பணியாளர்கள் கையுறை, தலையுறைகளை அணியாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.  மேலும் அந்த நிறுவனம் உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தைப் பெறாமல் இருப்பதும் தெரியவரவே  இந்த குறைகளை சரிசெய்ய அந்த நிறுவனத்திற்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த அவகாசத்தில் குறைகளை சரிசெய்யத் தவறினால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவு 55,56 மற்றும் 63 -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

சுகாதாரம்

இது போன்ற சுகாதாரமற்ற நிலை நாடு முழுவதும் பல்வேறு உணவு நிறுவனங்களில் நிலவி வரும் நிலையில், இதனைப் பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகனிடம் கேட்ட போது,  "உணவு என்பது மனிதனின் உடல்நலத்தோடு தொடர்புடையது என்பதால் அதனைத் தூய்மையான முறையில் தயாரிக்கவும், கையாளவும் வேண்டும். இன்றைய நாட்களில் பெரும்பாலான மக்கள் பல்வேறு காரணங்களால் வெளி உணவகங்களையே நாடிச் செல்கின்றனர்.  ஆனால் பெரும்பாலான உணவு நிறுவனங்கள் சுகாதாரமில்லாமல் செயல்பட்டு வருகின்றன.  அவ்வாறு சுத்தமில்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் மீது 'உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ்' நடவடிக்கை எடுக்கப்படும்.  அனைத்து உணவு நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  இந்த உரிமம் உணவு தயாரிக்கும் நிறுனத்தின் அடிப்படை சுகாதார வசதிகளை ஆய்வு செய்த பின்னரே கொடுக்கப்படும்.  அவ்வாறு இந்த உரிமத்தைப் பெறாத நிறுவனத்தின் மீது உணவு தர நிர்ணய சட்ட பிரிவு 63-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆய்வு

 உணவு தயாரிக்கும் முறையும் அதனைப் பதப்படுத்தி சேமித்து வைக்கும் முறையும் பல்வேறு விதிமுறைகளை உள்ளடக்கியது.   உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தன்சுத்தத்தை அனுசரிக்க வேண்டும். உணவைக் கையாளும் போது கையுறை, தலையுறைகள் பயன்படுத்த வேண்டும்.  மேலும் எப்போதும் சமைத்த பொருட்களோடு சமைக்கப்படாத பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடாது.  அப்படி வைக்கும் போது சமைக்கப்படாத உணவுப் பொருட்களில் இருந்து நுண்ணுயிரிகள் சமைத்த பொருட்களுக்குப் பரவி உணவு கெடுதலை ஏற்படுத்தும்; அந்த உணவை உண்போரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  மேலும் உணவு தயாரிக்கும் இடம் காற்றோற்ற வசதி உள்ளதாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.  இது போன்ற பல விதிமுறைகளை உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.  இதனைப் பின்பற்றுவதன் மூலம் மக்களின் உடல்நலமும், ஆரோக்கியமும் மேம்படும்" என்றார்.