இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மீனவர்கள்! - இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | The Sri Lankan Navy Attack TN fishermen with steel wire

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (20/01/2019)

கடைசி தொடர்பு:13:15 (20/01/2019)

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மீனவர்கள்! - இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் மீனவர்கள் இரவோடு இரவாகக் கரை திரும்பியுள்ளனர்

மீனவர்கள் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்த மீனவர்

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஜெரோன் என்பவருக்குச் சொந்தமான படகினை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த படகில் ஏறிய இலங்கை கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களைக் கட்டி வைத்து இரும்பு கம்பி மற்றும் கயிற்றினால் தாக்கியுள்ளனர். இதில் மீனவர் ஜெரோனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட்டுள்ளது.

இதன் பின்னர் படகில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய அவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளையும் அறுத்து விட்டனர். தொடர்ந்து மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ் கருவிகளை கைப்பற்றிக்கொண்டு மீனவர்களை விடுவித்துள்ளனர். மீன்பிடி வலை,  அறுக்கப்பட்டதால் மீன்பிடிக்க முடியாமல் இரவோடு இரவாகக் கரை திரும்பியுள்ளனர் மீனவர்கள். இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளான மீனவர் ஜெரோன் இன்று அதிகாலை ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றார். 

கடந்த வாரம் இலங்கை கடற்படை துரத்தியதால் படகு மூழ்கியதில் மீனவர் முனியசாமி என்பவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.