"பெரிய விஷயங்களைச் சத்தம் இல்லாம செய்றீங்க!" - விஜய் சேதுபதி பாராட்டால் இளைஞர்கள் மகிழ்ச்சி | VijaySethupathi praised the youth who are carrying out natural agriculture!

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (20/01/2019)

கடைசி தொடர்பு:13:45 (20/01/2019)

"பெரிய விஷயங்களைச் சத்தம் இல்லாம செய்றீங்க!" - விஜய் சேதுபதி பாராட்டால் இளைஞர்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றிக்காட்டிய சாதனையை சென்னையில் விழாவாக எடுக்கும் தமிழக இளைஞர்களை தட்டிக் கொடுத்து,"நீங்கள் பெரிய பெரிய விஷயங்களை சத்தமில்லாமல் செய்றீங்க. வாழ்த்துகள்" என்று நடிகர் விஜய் சேதுபதி  பாராட்டிய சம்பவம் இளைஞர்களுக்கு உற்சாக டானிக்கை ஊட்டி இருக்கிறது.
 

இளைஞர்கள்

பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. 28 வயது இளைஞரான இவர்,சிங்கப்பூரில் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தார். ஆறு வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது,நம்மாழ்வார் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராடிய போராட்டத்தில் ஆர்வமாக கலந்துக்கொண்டார். அதன்பிறகு,சிங்கப்பூர் வேலையை உதறிவிட்டு,நம்மாழ்வாரோடு பயணித்தார். நம்மாழ்வார் மறைந்துவிட,தனது தந்தையிடம் போராடி தனது நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்தார். அது தந்த ஊக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களோடு சில வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் டாஸ்மாக் என்ற அமைப்பை நடிகை ரோகிணியை வைத்து தொடங்கினார். அந்த அமைப்பு மூலம் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றி,அவர்கள் விளைவிக்கும் பொருள்களை அதிக விலை கொடுத்து இவர்களே வாங்கி டாஸ்மாக் என்ற பெயரில் விவசாயிகளின் விபரங்களோடு விற்பனை செய்ய தொடங்கினார்கள். 
 

விவசாயம்

கடந்த வருடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒத்துழைப்போடு அங்கு 15 விவசாயிகளை மனம் மாற்றி,100 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்தனர். அதில் நல்ல மகசூல் கிடைக்க,புதுச்சேரி அரசு 1000 விவசாயிகளை 2000 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வைக்க ஏற்பாடு செய்தது. இந்த இளைஞர்களும் கிச்சடிச் சம்பா மற்றும் சீரகச் சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை பயிர் செய்தனர். அதுவும் நன்றாக விளைந்து பலன் கொடுத்திருக்கிறது.

இதனால்,இந்த இயற்கை விவசாயத்தை தமிழகத்திலும் விவசாயிகளை பெருமளவு செய்ய வைக்க ஏதுவாக வரும் 22 ம் தேதி டாஸ்மாக் அமைப்பு சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் விழா எடுக்கிறார்கள். 'தென்இந்தியாவின் தலைச்சிறந்த விவசாயிகளும் இளைஞர்களும் இணையும் விழா' என்ற பெயரில் விழா எடுக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை அந்த விழாவில் ஒன்றுகூட்ட இருக்கிறார்கள்.

தோழர் நல்லக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் வேளாண்மைத்துறை செயலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில்தான்,இந்த விழாவுக்கான அழைப்பிதழை டாஸ்மாக் அமைப்பின் மற்ற இளைஞர்களோடு சென்று நடிகர் விஜய்சேதுபதியிடம் கொடுத்திருக்கிறார் கணேசமூர்த்தி.

நம்மாழ்வார்


 அதுபற்றி,நம்மிடம் பேசிய கணேசமூர்த்தி, "இந்த விழிப்பு உணர்வு நம்மாழ்வார் அய்யா போட்ட விதை. அந்த விதையை புதுச்சேரியில் வளமாக பரப்பிட்டோம். தமிழகத்தில் பரப்பும் முதல் முன்னெடுப்புதான் இந்த விழா. இந்த விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி நம் மண்ணின் மீதும்,மக்கள் மீதும் அன்பு கொண்டிருக்கும் நடிகரான விஜய்சேதுபதியிடம் அழைப்பிதழ் கொடுக்க போனோம். ஆனா,கடைசி நேரத்தில் கொடுக்க போனதால்,'விழா நடக்கும் 22 ம் தேதி கேரளாவில் சூட்டிங் இருப்பதாகவும்,அன்றைக்கு வரமுடியாது' என்றும் வருத்தத்தோடு தெரிவித்தார் விஜய்சேதுபதி. ஆனா,நேரம் ஒதுக்கி எங்க முயற்சிகளை ஆர்வமாக காது கொடுத்து கேட்ட அவர்,'நீங்க பெரிய பெரிய விசயங்களை சத்தமில்லாமல் செய்றீங்க. வாழ்த்துகள்'ன்னு சொன்னார்.

நாராயணசாமி

அதோடு,'அடுத்தடுத்த உங்க முயற்சிகளின்போது நான் கட்டாயம் கூட இருப்பேன். எனக்கு டாஸ்மாக் ஒவ்வொரு முயற்சியையும் அப்டேட் பண்ணுங்க'ன்னு சொன்னார். எங்களுக்கு அவரது பாராட்டு பெரிய ஊக்கத்தை தந்திருக்கு" என்றார் மகிழ்ச்சியாக!.