திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை! | Group clash 3 killed in kummidipoondi

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (20/01/2019)

கடைசி தொடர்பு:15:10 (20/01/2019)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில்  கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அரிவாளுடன் முகத்தில்  துணி கட்டிக்கொண்டு  8 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆகாசையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆகாஷ், அதே பகுதியை சேர்ந்த விமல் மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சதிஷ் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

போலீஸ்

இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த சதிஷ் மற்றும் விமல் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் முன்பகை காரணமா அல்லது மாமூல் வசூலிப்பதில் தகராறா என்ற கோணத்தில் காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

ரயில்வே தண்டவாளம்

கொலை நடந்த  பகுதியில்  பெரும் பதற்றம் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்கத் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை சம்பவம் நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஒரே நேரத்தில் கும்முடிப்பூண்டி பகுதியில் மூன்று கொலை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.