`அ.தி.மு.கவுக்கு துரோகம் செய்தவர்கள் விலாசம் தெரியாமல் போவார்கள்’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு! | Chief minister Edappadi Palanisamy slam ttv dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (20/01/2019)

கடைசி தொடர்பு:15:40 (20/01/2019)

`அ.தி.மு.கவுக்கு துரோகம் செய்தவர்கள் விலாசம் தெரியாமல் போவார்கள்’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசுத்தொழில் மீண்டும் தழைத்தோங்க தமிழக அரசு உறுதுணையாய் இருக்கும் என சாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உறுதியளித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற உள்ள அ.தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று சென்றார். விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூரில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வர் 10 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சாலையின் நடுவே வெயிலில் அமர்ந்திருந்தனர். ஆனால் 12.50 மணிக்கு மேல் தான் முதல்வர் மேடைக்கு வந்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

எடப்பாடி பழனிசாமி

அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசும்போது, ``சாத்தூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வெற்றி விழா கூட்டம் போல இந்த கூட்டம் உள்ளது. இதன்மூலம் நம் வெற்றி பிரகாசமாக இருப்பது தெரிகிறது. அ.தி.மு.க மிகவும் வலிமையான இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அ.தி.மு.கவை அழித்துவிடலாம் என பலர் முயற்சி செய்கின்றனர். டி.டி.வி தினகரன் கூறிய ஆசை வார்த்தையை நம்பி இந்த தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவரோடு சென்றார். இன்று அவரின் நிலை என்ன? தினகரன் அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார்.

edappadi

சட்டமன்ற உறுப்பினர் ஓட்டுப்போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். எனவே துரோகம் செய்த அவருக்கு இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.கவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் ஏதாவது ஒரு பதவியில் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் துரோகம் செய்பவர்கள் விலாசம் தெரியாமல் போவார்கள் என்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்களே சாட்சி. டி.டி.வி தினகரன் எப்போது கட்சிக்கு வந்தார். கட்சிக்காக என்ன செய்தார்? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடினாரா? இல்லை இந்த இயக்கத்திற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்து சிறை சென்றாரா? ஜெயலலிதா இருக்கும் வரை 10 ஆண்டுகள் வீட்டுக்கு வர முடியவில்லை. துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

edappadi

பட்டாசுத்தொழில் மீண்டும் தழைத்தோங்க தமிழக அரசு உறுதுணையாய் இருக்கும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்து தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும். தைப்பொங்கல் செலவுக்காக ஏழைகளுக்கு கொடுத்த பணத்தை கூட தடுக்க முயன்ற கட்சி தி.மு.க தான். வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அ.தி.மு.கவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.