வடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! | Vadalur vallalar jyothi thaipusam festival start from today

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (20/01/2019)

கடைசி தொடர்பு:18:50 (20/01/2019)

வடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்தியஞானசபையை அவர் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை   போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்மசாலையை நிறுவினார். இப்பகுதியில் அன்று முதல் இன்று வரை அன்னதானம் வழங்கப்பட்டு  வருகிறது.  பின்னர் வள்ளலார் மேட்டுக்குப்பதில் சித்திபெற்றார். இதனைத் தொடர்ந்து தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.

வடலூர்

148வது ஜோதி தரிசனம்  20ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு முதலில் தருமசாலையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி ஆகிய கிராமங்களில் கொடியேற்றப்பட்டு, ஞானசபையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து  நாளை 21-ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு  முதற்கால ஜோதி  தரிசனம் நடைப்பெற உள்ளது.

ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட உள்ளது.  இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் 1 மணிக்கும் ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் 22-ம்  செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும். வள்ளலார் தைப்பூச  ஜோதி தரிசனத்தை முன்னிட்டு  கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளத்துடன், மது மற்றும் மாமிச  கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.