திருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு! | Two youngster dead near Thiruvannamalai

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (20/01/2019)

திருவண்ணாமலை அருகே திருட்டு மீன்பிடி கும்பல் அட்டூழியம் - 2 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை.  இந்த அணையில் பிடிக்கப்படும் மீன் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 100 முதல் 150 வரை குறைந்த விலையில் மீன் விற்பனை செய்யப்படுவதால் மக்களிடையே நல்ல வரவேற்பு அதிகம். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசே மீன்பிடித்து விற்பனை செய்து வந்தது. அப்போது திருட்டு மீன் பிடிப்பவர்களின் அக்கப்போர் அதிகமானதால், தனியாருக்கு டெண்டர் விட்டது.  கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு ஆண்டுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மீன் பிடிக்க டெண்டர் எடுத்துள்ளார் கார்த்திகேயன் என்பவர்.

கொலை

இந்த நிலையில், அணையில் திருட்டு மீன் பிடிப்பவர்களை தடுக்க ரோந்து பணிக்காக தலா 5 பேர் வீதம், இரண்டு ஷிப்ட்டாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் திருட்டு மீன் பிடிப்பவர்களை தடுத்து வந்தனர். அவ்வப்போது திருட்டு மீன் பிடிப்பவர்கள் போட்ட வலைகளையும் கைப்பற்றி வந்தனர். இப்படியிருக்க, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரோந்துப் பணிக்காக மல்லிகாபுரத்தை சேர்ந்த சிலம்பரசன், முனியப்பன், சந்தோஷ், மற்றும் சாத்தனூரை சேர்ந்த மூர்த்தி, செந்தில் ஆகிய 5 பேரும் அணையின் கடைசிப் பகுதியான கோரையாறு பகுதிக்கு படகில் சென்றுள்ளனர்.  

அங்கு திருட்டு மீன் பிடிக்கும் கும்பல் இவர்கள் வருவதை தெரிந்துகொண்டு  கருங்கல் மற்றும் கட்டைகளை கொண்டு கடுமையாக 5 பேரையும் தாக்கியுள்ளனர். இதில் செய்வது அறியாமல் நிலைகுலைந்து போன அவர்கள் அங்கிருந்து நீரில் குதித்து தப்பியுள்ளனர். 5 பேரில் 3 பேர் மட்டுமே கரைக்கு வந்தனர். சந்தோஷ், செந்தில் ஆகிய 2 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தப்பி வந்தவர்கள் சாத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், படகில் சென்று தேடியது போலீஸ். இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை முடித்துவிட்டு மீண்டும் நேற்று காலை முதல் தேடத்தொடங்கியது. நேற்று மாலை சந்தோஷ் உடல் தண்ணீரில் மிதந்து வந்துள்ளது.

அதனை, போலீஸ் கைப்பற்றி கரைக்கு கொண்டுவந்து, சோதனை செய்தபோது சந்தோஷுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தது தெரிந்தது. திருட்டு மீன் பிடிக்கும் கும்பல் கடுமையாக தாக்கியதில், சந்தோஷுக்கு அடி பலமாக விழுந்துள்ளது. இதனால் அவர் நீரில் குதித்து, நீந்த முடியாமல் நீரிலேயே மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் செந்திலும் இதேபோல இறந்து இருக்க கூடும் என்று சந்தேகத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.  கொலை செய்த கும்பல் யார் என்று தெரியாமல், அணையின் கரையோரம் இருக்கும் வேப்பூர், போயப்பள்ளி, தாழையூத்து, பொன்னிதண்டா, ஆகிய கிராம மக்களிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க