37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்! | old students of government school met after 37 years near Tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (20/01/2019)

37வருடங்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பு; நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாகப் படித்த அரசுப் பள்ளி மாணவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியானதாக இருந்தது. தாங்கள் படித்த பள்ளியின் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதைக் கண்டு வேதனை அடைந்த அவர்கள் புதிய கட்டடம் கட்ட நிதி உதவி செய்தார்கள்.

நெல்லை மாவட்டத்தில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாகப் படித்த அரசுப் பள்ளி மாணவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியானதாக இருந்தது. தாங்கள் படித்த பள்ளியின் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதைக் கண்டு வேதனை அடைந்த அவர்கள் புதிய கட்டடம் கட்ட நிதி உதவி செய்தார்கள். 

அரசுப் பள்ளி  பழைய மாணவர்கள்

பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளமற்ற சிரிப்புடன் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்தபடி எதிர்காலச் சிந்தனை ஏதுமின்றி துள்ளிப் பறந்த பள்ளிப் பருவத்தின் நினைவுகளை அத்தனை எளிதில் யாராலும் கடந்து விட முடியாது. அதனால் கால ஓட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியபோதிலும் பழைய மாணவர்களின் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது. 

அந்த வகையில், நெல்லை மாவட்டம் பணகுடி அரசுப் பள்ளியில் 1982-ம் வருடம் பத்தாம் வகுப்புப் படித்து முடித்த பழைய மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 45 பேர் கலந்துகொண்டனர். அரசுப் பள்ளியில் படித்து உயர்ந்த நிலையை எட்டிய பலரும் தங்களுடைய பழைய நினைவுகள் குறித்து பரவசத்துடன் பேசி மகிழ்ந்தனர். அந்த காலத்தில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்தும், அதில் கிடைக்கும் குறைவான மதிப்பெண்கள் பற்றியும் சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்தனர். 

பள்ளிக் கட்டடம்

தாங்கள் அமர்ந்து படித்த வகுப்பறைகள், ஓடித் திரிந்த பள்ளி வளாகப் பகுதிகள், விளையாட்டு மைதானம் என ஒவ்வொரு இடத்துக்கும் சென்ற பழைய மாணவர்கள், மலரும் நினைவுகள் கண்களில் தெரியப் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். பழைய மாணவர்களான குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன், இந்தியன் பீச் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டன் அலி, திருவனந்தபுரம் மகாமதுரம் புட்ஸ் நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் பழைய நண்பர்களைக் கட்டியணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

தங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த முன்னாள் ஆசிரியர்களான யூசுப், ராஜாமணி, சுபாஷ், இருதயராஜ், முத்துபாண்டியன் ஆகியோரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். ஆசிரியர்களின் கண்டிப்பு, சிறப்பாகப் பாடங்களை நடத்தி தங்களைத் தேர்வுக்குத் தயார் செய்த நிலை ஆகியவை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். இந்த விழாவில் பங்கேற்ற பழைய மாணவர்கள் பலரும் முன்னாள் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கிக் கௌரவித்தனர்.

பள்ளியின் கல்வெட்டு

பள்ளி வளாகத்தைச் சுற்றி வந்த பழைய மாணவர்களின் கண்களில், தாங்கள் படித்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு 59 வருடங்கள் ஆகிவிட்டதால், சுவர்களில் கீறல் விழுந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதனால் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தங்களுடைய பங்களிப்பாக ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சொக்கலிங்கம் மற்றும் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் சகாயராணி ஆகியோரிடம் வழங்கினார்கள். 

பள்ளிக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்யக் காத்திருப்பதாகவும் பழைய மாணவர்கள் உறுதியளித்தார்கள். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு தங்களை 37 வருடங்களுக்கு முன்னோக்கி அழைத்துச் சென்றதாக இதில் பங்கேற்ற பலரும் மகிழ்வுடன் பேசியபடி கலைந்து சென்றார்கள்.