300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு! | 300 bulls and 500 players participated in jallikkattu near sivakasi

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (20/01/2019)

கடைசி தொடர்பு:21:00 (20/01/2019)

300 காளைகள்;500 மாடுபிடி வீரர்கள் - சிவகாசி அருகே 18 கிராமமக்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு!

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் பல்வேறு இடங்களிலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள ஆலடி ஈஸ்வர் திருக்கோயில் முன் 18 கிராம மக்கள் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு

அப்போது மாடுபிடி வீரர்களும், மாடுகளின் உரிமையாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைத்து காளைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு காளைகளும், வீரர்களும் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி காலை 9.30 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு

இதில் அலங்காநல்லூர், பாலமேடு,  புதுக்கோட்டை , உசிலம்பட்டி, மதுரை ,விருதுநகர்,உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 284 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காமல் சென்ற காளைகளுக்கும் கட்டில், பீரோ, பாத்திரம், சைக்கிள் போன்ற ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியை காண ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், மல்லி, நிறைமதி, கிருஷ்ணபேரி, வடபட்டி உள்ளிட்ட சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு

ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புப் பணியிலும், மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சையளிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.