`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்! | Fireworks workers hold ‘Kanji Thotti’ protest in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (20/01/2019)

`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்!

பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்கக் கோரி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள் இன்றும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பட்டாசுத் தயாரிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கடந்த நவம்பர் மாதம் முதல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

கஞ்சிகாய்ச்சுதல்

எனவே ஆலைகளை திறக்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பட்டாசுத் தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை ஆலைகள் திறக்கப்படவில்லை. பலர் வேலைக்காக வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.

கஞ்சிகாய்ச்சுதல்

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பட்டாசு ஆலைகளை திறந்து 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ- பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டம் நடைபெற்றது. பட்டாசு தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.சிவகாசி முருகன் காலனி, டெய்லர் காலனி, வெள்ளூர் பொம்மையாபுரம், இனாம்ரெட்டியபட்டி, வச்சக்காரப்பட்டி, கோணம்பட்டி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 இடங்களில்  போராட்டம் நடைபெற்றது.