9 மணி நேரம்... 1,353 காளைகள்! கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு | Pudukkottai viralimalai jallikattu creating guinness world record

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (20/01/2019)

கடைசி தொடர்பு:11:05 (21/01/2019)

9 மணி நேரம்... 1,353 காளைகள்! கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று துவங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 மணி நேரத்தில் 1,353 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு, விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் தாக்கியதில் பார்வையாளர்கள் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. கின்னஸ் சாதனை முயற்சிக்கான இந்த மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 8.20மணிக்கு தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. முன்னதாக, ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. மக்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின் அனுப்பிவைக்கப்பட்டனர். பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டு,  அதில் பார்வையாளர்கள் அமர்த்தப்பட்டனர். வீரர்கள் காப்பீடு செய்யப்பட்டும், மிகுந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவாக உள்ளே களமிறக்கப்பட்டனர்.

 

பழனிசாமி

ரசிகர்களின் கரகோஷத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் காளை அவிழ்த்து விடப்பட்டது. முதல் காளை, வீரர்களின் பிடியில் சிக்காமல் கெத்து காட்டியது. தொடர்ந்து, அடுத்தடுத்த காளைகள் வாடிவாசலில் இருந்து கட்டவிழ்த்துவிடப்பட்டன. திருச்சியைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், அடுத்தடுத்து காளைகளைப் பிடித்து, ரசிகர்களின் கரகசோகங்களைப் பெற்றதோடு, பரிசுகளையும் தட்டிச்சென்றனர். தங்கநாணயம், குத்துவிளக்கு, சைக்கிள், மிக்சி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களைப் போட்டியின்போதே பிடிபடாத காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் வழங்கப்பட்டன. வெள்ளைக் கொம்பன், செவலைக்கொம்பன் என அடுத்தடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் களமிறக்கப்பட்டன. விஜயபாஸ்கரின் மூன்று காளைகளையும் வீரர்களால் அடக்கமுடியவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்ற செவலைக்கொம்பன் காளை, வீரர்களுக்கு போக்குக் காட்டியது. காளை அருகே வீரர்கள் யாரும் நெருங்கவில்லை. இதேபோல, இலங்கை அமைச்சர் செந்தில்தொண்டைமான் காளையும் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.

 

விராலிமலை ஜல்லிக்கட்டு

முதலமைச்சரைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவிற்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டுகளித்தார். காலை 8.25 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5.35 மணிக்கு நிறைவுபெற்றது. 9 மணி நேரத்தில் 1,353 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. மதுரை, சேலம், தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் இதில் பங்கேற்றன. கின்னஸ் சாதனை முயற்சியாக அங்கீகரிப்பதற்காக, லண்டனில் இருந்து மார்க், மெலினா ஆகியோர் வந்திருந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்காணித்தனர். ஒரே நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியில், அதிக காளைகளை அவிழ்த்துவிட்டு, விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அவர்கள் அறிவித்ததுடன், கின்னஸ் சாதனையாக அங்கீகரித்தனர். அதற்கான சான்றிதழை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினர்.

கின்னஸ் சாதனை

ஜல்லிக்கட்டுக்காக 1500 காளைகள் வரையிலும் பதிவுசெய்யப்பட்டிருந்தபோதிலும், 150 காளைகள் வரை கட்டவிழ்க்க முடியவில்லை. இதனால்,மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம், சிறந்த மாடுபிடிவீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, சிறந்த காளையாக ராப்பூசலையைச் சேர்ந்த பி.முருகானந்தம் காளை தேர்ந்தெடுக்கப்பட்டு, கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல, சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புல்லட் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டை பார்வையிட்டுக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே, சொரியம்பட்டியைச் சேர்ந்த ராமு (35), திருச்சி மாவட்டம் ஜீயபுரம் சதீஸ்குமார் (25) காளை குத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.13 பேர் படுகாயமடைந்தனர்.

விராலிமலை

 

போட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் வந்து குவிந்தனர். திருச்சி சரக டி.ஐ.ஜி தலைமையில், 4 மாவட்டத்தைச் சேர்ந்த    எஸ்.பி-க்கள், 25 டிஎஸ்பி-க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், கேலரிக்குச் செல்ல மக்கள்கூட்டம் அலைமோதியதால், அவ்வப்போது தடியடி, தள்ளுமுள்ளு என பதற்றம் நிலவியது.

விராலிமலை ஜல்லிக்கட்டு

 

மொத்தத்தில், விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசான காரை தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுத்து, தனது தொகுதி செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். சிபிஐ விசாரணை, வருமான வரித்துறை ரெய்டு என அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி எண்ணங்களை மாற்றும் வகையில், தமிழர்கள் கொண்டாடும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை கின்னஸ் சாதனைப் போட்டியாக நடத்தி முடித்துள்ளார் என உள்ளூர் மக்கள் பேசிவருகின்றனர்.