‘நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள்’ - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மர்ம நபர்கள் கைவரிசை | Theft in educational office at tirupur district

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (21/01/2019)

கடைசி தொடர்பு:10:40 (21/01/2019)

‘நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள்’ - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

திருப்பூர் அருகே, மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலக அறைகளில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் நள்ளிரவு, வழக்கம்போல பள்ளியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாகம்மாள் என்ற பெண்மணி, பள்ளியின் காம்பவுண்டு சுவற்றில் ஏறிக்குதித்து 2 மர்ம நபர்கள் தப்பியோடுவதைப் பார்த்திருக்கிறார். இதையடுத்து, அவர் உடனே சத்தம் எழுப்ப, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துவிட்டு, பள்ளியின் நிர்வாகத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

 மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட 2 அறைகள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் அறை என மொத்தம் 6 அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதில், அந்தந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த அலுவலக மடிக்கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்திருக்கிறது. பள்ளியின் தலைமையாசிரியர், இதுகுறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகிறார்கள்.