வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசனம்! | Thai Poosam jothi festival in vadalur vallalar temple

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:11:00 (21/01/2019)

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசனம்!

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருதூர்  கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை  உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்தியஞானசபையை நிறுவினார். ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபை அருகிலேயே தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அன்னதானம் வழங்கப்பட்டு  
வருகிறது. பின்னர் வள்ளலார், மேட்டுக்குப்பத்தில் சித்திபெற்றார்.  இதைத் தொடர்ந்து, தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று, தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதன்படி,  வடலூரில் வள்ளலார்  நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில், ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.

வடலூர்

இந்த ஆண்டு 148-வது ஜோதி தரிசனம்,  நேற்று (20-ம் தேதி)  கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, முதலில் தருமசாலையில்  கொடியேற்றப்பட்டது. அடுத்து மருதூர், கருங்குழி ஆகிய கிராமங்களில் கொடியேற்றப்பட்டு, ஞானசபையில் கொடியேற்றப்பட்டது.  தொடர்ந்து,  இன்று  திங்கள்கிழமை காலை 6 மணிக்கு  முதற்கால ஜோதி  தரிசனம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம்செய்தனர்.

ஜோதி தரிசனம்

 இதைத் தொடர்ந்து, காலை 10 மணி, பிற்பகல் 1 மணி,  இரவு 7 மணி மற்றும்  இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம்  நடைபெற உள்ளது. நாளை  செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும்.  வள்ளலார் தைப்பூச  ஜோதி தரிசனத்தை முன்னிட்டு  கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மது மற்றும் மாமிசக்  கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.