குழந்தைபாக்கியம் வேண்டி நள்ளிரவில் யாக பூஜை! - தம்பதிக்கு நேர்ந்த கொடூரம் | Man who Attack Couples and theft their jewels in kanchipuram

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (21/01/2019)

கடைசி தொடர்பு:11:20 (21/01/2019)

குழந்தைபாக்கியம் வேண்டி நள்ளிரவில் யாக பூஜை! - தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்

குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதியருக்கு நள்ளிரவு பூஜை செய்வதாகக் கூறி, தலையில் கல்லைப் போட்டு நகையைப் பறித்துச்சென்ற சம்பவம், காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்ம நபரை காஞ்சிபுரம் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

நள்ளிரவு பூஜை

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். திருமணமாகி மூன்று வருடங்களாகியும்  குழந்தை இல்லை. இதனால், மனைவி ஜானகியைப் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுவந்தார். கோயில் கோயிலாகச் சென்று பூஜைகளை மேற்கொள்வார் ஜானகி. இந்த நிலையில், பிரபாகரனுக்கு காஞ்சிபுரத்தை அடுத்த தாமரைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர், பௌர்ணமி பூஜை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் எனக் கூறி, நேற்று இரவு 11 மணி அளவில், தாமரைத்தாங்கல் மனோ மோகன் அவென்யூ பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பூஜை செய்ய வரச் சொல்லியிருக்கிறார்.

காஞ்சிபுரம்

யாரும் இல்லாத அந்தப் பாழடைந்த வீட்டுக்கு அவர்கள் வந்ததும், யாகம் வளர்ந்து பூஜையைத் தொடங்கினார் பாபு. அப்போது, எதிரில் இருந்த பிரபாகரன்-ஜானகி தம்பதியிடம் கண்களை மூடிக்கொண்டு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். உடனே அவர்களும் கண்களை மூடிக்கொண்டு பூஜையில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லை. சுற்று வட்டாரப் பகுதியில் வீடுகளும் இல்லை. இதைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பாபு, பிரபாகரனின் தலையில் கல்லால் தாக்கி, ஜானகியிடம் இருந்து 10 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து, அவரது மனைவி ஜானகி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். முகத்தில் பலத்த காயங்களோடு மீட்கப்பட்ட பிரபாகரனுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்பு அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய பாவுவை காஞ்சிபுரம் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க