மகனுக்காக எம்பி தொகுதியைக் குறிவைக்கும் துரைமுருகன்! - வேலூர் தி.மு.க-வில் சலசலப்பு | Duraimurugan looking for MP seat

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (21/01/2019)

கடைசி தொடர்பு:12:55 (21/01/2019)

மகனுக்காக எம்பி தொகுதியைக் குறிவைக்கும் துரைமுருகன்! - வேலூர் தி.மு.க-வில் சலசலப்பு

மகனுக்காக எம்பி தொகுதியைக் குறிவைக்கும் துரைமுருகன்! - வேலூர் தி.மு.க-வில் சலசலப்பு

‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகத் தனது மகனை எப்படியும் நிறுத்தி வெற்றிபெறச் செய்திட வேண்டும்’’ என்று கணக்குப் போடுகிறார் துரைமுருகன். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் மாவட்ட நிர்வாகிகள், துரைமுருகன் மகனின் பிறந்தநாள் விழாவைப் புறக்கணித்து, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

துரைமுருகன் மகனின் பிறந்தநாள் விழா

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்து ஓராண்டு ஆகாத நிலையில், தி.மு.க-வினர் தங்களின் பிறந்தநாள் விழா, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை உட்பட, எந்த விழாவையும் கொண்டாடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க பொருளாளராக இருக்கும் துரைமுருகன், தன்னுடைய மகன் கதிர் ஆனந்த் பிறந்தநாளை, வேலூர் காட்பாடியில் உள்ள வீட்டில் 19-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடினார். கதிர் ஆனந்த் பிறந்தநாளையொட்டி, வேலூர் மாநகர் முழுவதும் பல இடங்களில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. பிறந்தநாள் விழாவில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக, மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார், அன்றைய தினம் பார்த்து வெளியூருக்குச் சென்றுவிட்டார். நந்தகுமாரின் ஆதரவாளர்கள் அனைவரும், துரைமுருகனின் மகன் பிறந்தநாள் விழாவைப் புறக்கணித்தனர்.

துரைமுருகன் மகனின் பிறந்தநாள் விழா

இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட, வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான காந்தி, நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். ‘‘மாவட்டச் செயலாளர்கள் நந்தகுமாருக்கும், காந்திக்கும் இடையே பனிப்போர் நீடித்துவருகிறது. துரைமுருகனுடனும், காந்திக்கு மனக்கசப்பு இருந்தது. பொருளாளரைப் பகைத்துக்கொண்டால், நமக்குத்தான் பிரச்னை என்று எண்ணிய எம்.எல்.ஏ காந்தி, ஏற்கெனவே பகையாடும் நந்தகுமாரை ஓரம்கட்ட இதுதான் சந்தர்ப்பம் என்று திட்டம் வகுத்து, துரைமுருகனுடன் ஒட்டிக்கொண்டதாக’’ தி.மு.க-வினரே பேசிக்கொள்கின்றனர்.

இதுபற்றி தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக இருக்கும் காட்பாடி தொகுதி, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. பெரும்பாலும், கிராமப்புறங்களை உள்ளடக்கியதாக இத்தொகுதி உள்ளது. இதனால், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தனது மகனை நிறுத்த துரைமுருகன் மனக்கணக்கு போடுகிறார்.

துரைமுருகன் மகனின் பிறந்தநாள் விழா

கட்சிக்காகப் பல ஆண்டுகளாக உழைத்து ஓடாய்த் தேய்ந்திருக்கும் மூத்த நிர்வாகிகளை ஓரம்கட்டிவருகின்றனர். வேலூர் மாவட்ட தி.மு.க-விற்குள் இப்போதே, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தலையீடு அதிகமாக இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள்கூட ஒதுங்கி நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எங்களின் குமுறலை யாரிடம் சென்று கொட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்’’  என்கிறார்கள், வேலூர் மாவட்ட தி.மு.க-வினர்.