மீண்டு வருகிறார் விஜயகாந்த்! - உற்சாகத்தில் தே.மு.தி.க | DMDK leader vijayakanth is back

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (21/01/2019)

கடைசி தொடர்பு:11:35 (22/01/2019)

மீண்டு வருகிறார் விஜயகாந்த்! - உற்சாகத்தில் தே.மு.தி.க

'தொண்டையில் ஏற்பட்ட பிரச்னைக்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்ற தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், வரும் பிப்ரவரி முதல்வாரத்தில் சென்னை திரும்புவார்' என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜயகாந்த்

சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு நாக்கை மடித்து, 'தில்' காட்டியவர், மனத்தில் பட்டதைப் பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் எனப் பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், சிங்கப்பூரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. 

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர், 2014 ஜூலை மாதம் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். 2017 மார்ச்சில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாள்கள் தொடர் சிகிச்சை, மீண்டும் சிங்கப்பூர் பயணம், 2018 ஜூலையில் அமெரிக்காவில் சிகிச்சை என விஜயகாந்த் எடுத்துக்கொண்ட சிகிச்சைகளின் பட்டியல் நீளும். கடந்த டிசம்பர் 18-ம் தேதி, இரண்டாம் கட்டமாக மீண்டும் அமெரிக்கா சென்றவர், ஒருமாதத்திற்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துவருகிறார். 

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடியது முதல், 'ஆக்வாமேன்' படத்தைத் தனது மனைவி பிரேமலதாவுடன் ஐமேக்ஸ் திரையரங்கில் ரசித்தது வரை விஜயகாந்த் வெளியிட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. அவர் இல்லாத வெறுமையை, கமென்ட்டுகளில் நெட்டிசன்கள் கொட்டித் தள்ளினார்கள். 

விஜயகாந்த் 2

தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று, சிறுநீரகப் பிரச்னைகளுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தே.மு.தி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் விஜயகாந்த்தின் இடத்தை நிரப்புவதற்காக திடீர் அரசியல் பிரவேசம் செய்த விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன், தனது தந்தையைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளாராம். பிப்ரவரி முதல்வாரத்தில் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தனது சிம்மக் குரலில் கர்ஜிக்க விஜயகாந்த் தயாராகிவிட்டார் என தே.மு.தி.க-வினர் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர். அவர் கலந்துகொள்ளும் முதல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய, இப்போதே தே.மு.தி.க-வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவரது குரலைக் கேட்க ஆவலோடு இருப்பது கட்சியினர் மட்டுமல்ல, பொதுஜனமும்தான். 

மீண்டு (ம்) வருகிறார் கேப்டன்!