'எங்கிருந்து நீங்க டீசல் வாங்கிச் செல்றீங்க' - தி.மு.க பிரமுகரைக் குறிவைத்துப்பிடித்த ஆர்டிஓ | DMK cadre caught by selling petrol diesel illegally

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (21/01/2019)

'எங்கிருந்து நீங்க டீசல் வாங்கிச் செல்றீங்க' - தி.மு.க பிரமுகரைக் குறிவைத்துப்பிடித்த ஆர்டிஓ

கரூரில், முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்ற தி.மு.க பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்ட இடம்

கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கரூர் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, ஒருவர் கேன்களில் டீசல் கொண்டுசெல்வதைப் பார்த்ததும், 'எங்கிருந்து டீசல் வாங்கிச் செல்கிறீர்கள்' என்று விசாரித்தபோது, 'அருகில் உள்ள பள்ளிப்பாளையம் பிரிவுச் சாலையில் உள்ள தோட்டத்தில் ஒருவரிடமிருந்து டீசல் பெற்றுச்செல்வதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபரையும் அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்த வருவாய் கோட்டாட்சியர், அங்கு ஒரு தென்னந்தோப்பில், முறைகேடாக டீசல் மற்றும் பெட்ரோல் விற்றுக்கொண்டிருந்த புஞ்சை தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த கொடி அரசு என்பரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனைசெய்தது தெரியவந்தது.

 உரிய அனுமதி இல்லாமல், சட்டத்துக்கு புறம்பான வகையில்  பெட்ரோல், டீசல் விற்றுவருவது தொடர்பாக காவல்துறை அலுவலர்களுக்கும், குடிமைப் பொருள் வழங்கும் தரக் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வரவழைத்த வருவாய் கோட்டாட்சியர், முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த நபர்மீது வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய உத்தரவிட்டார். மேலும், அங்கிருந்த 120 லிட்டர் டீசல் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி கேன்களைப் பறிமுதல் செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

முறைகேடாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்ட இடம்

இதையடுத்து, வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், குடிமைப்பணி பொருள் வழங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் சார்பு ஆய்வாளர் சையது அலி ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த பொருள்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். கைதுசெய்யப்பட்டுள்ள கொடி அரசு, தி.மு.க-வைச் சேர்ந்தவராம். கரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து டேங்கர் லாரி டிரைவர்கள் பெட்ரோல், டீசலை திருடி விற்பதாகவும், அந்த பெட்ரோல், டீசலை வாங்கி விற்கும் நபர்தான், இந்த கொடி அரசு என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.