`மருமகளுடன் பேசியதால் நடந்த விபரீதம்'- 70 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட பின்னணி   | 70 years old old man murdered in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (21/01/2019)

கடைசி தொடர்பு:14:42 (21/01/2019)

`மருமகளுடன் பேசியதால் நடந்த விபரீதம்'- 70 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட பின்னணி  

கொலை

மருமகளுடன் 70 வயதாகும் கணவர் பேசுவது பிடிக்காததால், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் மனைவியின் உறவினரை போலீஸார் தேடிவருகின்றனர். 

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு, கலெக்டர் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர், ஏசுராஜன் (70). இவர், அத்திப்பட்டி பகுதியில் சொந்தமான கம்பெனி நடத்திவந்தார். இவரின் மனைவி கலா. இவர்களுக்கு அருள்ராஜ் என்கிற மகனும் ஒரு மகளும் உள்ளனர். அருள்ராஜுக்கு அல்போன்ஸ் ரூபி என்பவருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஏசுராஜனுக்கும் கலாவுக்கும் கடந்த சில மாதங்களாகக் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது. ஏசுராஜனுக்கு தினமும் மகனின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு வரும். ஏசுராஜன், மருமகள் அல்போன்ஸ் ரூபியுடன் சகஜமாகப் பேசிவந்துள்ளார். இது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கணவர் ஏசுராஜன் குறித்து அவரின் மனைவி கலா, தன்னுடைய தூரத்து உறவினரான கோபால் மற்றும் மகள், மருமகனிடம் கூறியுள்ளார். கலாவுக்கு, கோபால் தம்பி முறை. 20-ம்தேதி இரவு 9.30 மணியளவில், ஏசுராஜனிடம் கோபால் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரமடைந்த கோபால், ஏசுராஜனைக் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஏசுராஜன் மயங்கினார். அதைப் பார்த்ததும் கோபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மயங்கிக்கிடந்த ஏசுராஜனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, ஏசுராஜனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

 கொலை

இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தப்பிய ஓடிய கோபாலை போலீஸார் தேடிவருகின்றனர். அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவரும். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஏசுராஜன் முதுமை காரணமாக வேலைக்குச் செல்வதில்லை. வீட்டிலேயே இருந்துவந்துள்ளார். அவர் நடத்திய கம்பெனியை அவரின் மகன் அருள்ராஜ் நடத்திவருகிறார். இவர்களின் குடும்பத்தில் பணவிவகாரம் தொடர்பாக சிலமாதங்களாகப் பிரச்னை இருந்துவந்துள்ளது. மேலும், மருமகளுடன் ஏசுராஜன் பேசுவது கலாவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் பெருங்களத்தூரைச் சேர்ந்த கோபால், ஏசுராஜனை தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. கோபால், வீட்டுக்கு வந்த பிறகுதான், ஏசுராஜன் கத்தியால் குத்தப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தற்போது, கோபால் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடிவருகிறோம். ஏசுராஜன் கொலை தொடர்பாக கலா, அவரின் மகள், மருமகன் உட்பட உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.