`நம்மாழ்வார் இருந்திருந்தால் எங்க பகுதியை வறட்சியில் இருந்து மீட்டிருப்பார்!'- இளைஞர்கள் உருக்கம் | Yongsters praises nammalvar

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (21/01/2019)

கடைசி தொடர்பு:18:15 (21/01/2019)

`நம்மாழ்வார் இருந்திருந்தால் எங்க பகுதியை வறட்சியில் இருந்து மீட்டிருப்பார்!'- இளைஞர்கள் உருக்கம்

பரிசாக வழங்கப்பட்ட மரக்கன்றுகள்

"நம்மாழ்வார் உயிரோடு இருந்திருந்தால், எங்க பகுதியை வறட்சியில் இருந்து மீட்டிருப்பார்" என்று பொங்கல் கொண்டாட்டத்தின்போது கடவூர் பகுதி இளைஞர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

பரிசாக வழங்கப்பட்ட மரக்கன்று

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். இந்தக் கிராமத்தில், பொங்கல் திருவிழாவை விமரிசையாகக் கொண்டாடிய அந்தக் கிராம இளைஞர்கள், உழவர் திருநாள், நம்மாழ்வாரின் நினைவேந்தல் மற்றும் இந்தக் கிராமத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன் உயிரைத் தியாகம்செய்த தியாகி வீரப்பனின் நினைவேந்தல் என்று முப்பெரும் விழாவாகக் கொண்டாடினர். இந்த விழாவில், விளையாட்டுப்போட்டிகள், மரக்கன்றுகள் வழங்குதல் ,பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு என பல்வேறு விசயங்களைச் செய்து அசத்தினர். கடந்த வருடம் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை யார் வளர வைத்துள்ளார்கள் என்பதை சோதனைசெய்து, அதற்கும் பரிசு வழங்கினார்கள்.

 பாலசுப்ரமணிஇந்நிலையில், நம்மிடம் பேசிய இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்ற இளைஞர்,
 "1960 வாக்கில், எங்க ஊரில் தமிழ் ஆசிரியராக இருந்தவர் ஆசிரியர் வீரப்பன். 1965ல் இந்தி மொழி எதிர்ப்புக்காக தனது உயிரை போக்கிக்கொண்டார். அவர் நடத்திய தைத்திங்கள் முதல்நாள் விளையாட்டுப் போட்டிகளை அவர் மறைந்த பின், மொழிப்போர் தியாகி தினத்திற்கு முன்னே அவர் நினைவாகக் கடந்த 55 ஆண்டுகளாக சிறப்பாகச் செய்துவருகிறோம். இது, எங்கள் ஊர்களில் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றானது என்றனர். அதேபோல, இந்த கடவூர் மலைகளுக்கு இடையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்தும் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்றன. போதிய மழை இல்லாமல், மக்கள் தங்கள் வயல்களில் வெள்ளாமை செய்யாமல் தரிசாகப் போட்டிருக்கிறார்கள். 

வருமானத்துக்கே வழியில்லாமல் மக்கள் அல்லாடிவருகிறார்கள். இங்கேதான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 60-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் அமைத்த வானகம் அமைந்துள்ளது.  அவர் இந்த வானகத்தை இயற்கை முறையிலான பசுமை வனமாக மாற்றி, உலகிற்கே இதை முன்மாதிரியாக மாற்ற நினைத்தார். ஆனால், அதற்குள் துரதிர்ஷ்டவசமாக மறைந்துவிட்டார். நம்மாழ்வர், எங்கள் கடவூர் பகுதி விவசாயிகளுக்கு கடவுள் என்றே கூறலாம். நஞ்சில்லா விவசாயத்தை எங்கள் பகுதியில் வளரச்செய்தவர். நம்மாழ்வர் இல்லாத இடத்தில் அவரது பணிகளை அவரது சீடர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதும், நம்மாழ்வர் இன்னும் எங்களோடு இருந்திருந்தால், எங்க பகுதியை வறட்சியில் இருந்து மீட்டிருப்பார். எங்க 30 கிராமங்களையும் பசுமையாக்கி இருப்பார்.

நம்மால்வார்

ஆனால், அதற்குள் அவரை இயற்கை எடுத்துக்கொண்டுவிட்டது. அதனால், இதுபோன்ற பெருமகனார் நினைவுகளை எப்போதும் நாம் போற்றி, அவரது வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக, இந்த பொங்கல் விழாவில் அவரை நினைவுகூர்கிறோம். அதோடு,அவரது நினைவாக மரக்கன்றுகளை வருடந்தோறும் மாணவர்களுக்கு பரிசாக அளிக்கிறோம். நம்மாழ்வார் அய்யா மறைந்தது எங்களுக்கு பேரிழப்பு" என்றார் உருக்கமாக.