`உங்க இலவசம் எனக்கு வேண்டாம்!’- பொங்கல் பரிசை அரசுக்குத் திருப்பிய அனுப்பிய சமூக ஆர்வலர் | pongal gift return to govt officials

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (21/01/2019)

`உங்க இலவசம் எனக்கு வேண்டாம்!’- பொங்கல் பரிசை அரசுக்குத் திருப்பிய அனுப்பிய சமூக ஆர்வலர்

தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு வேண்டாம் என மீண்டும் தமிழக அரசுக்கே அதைத் திருப்பிக்கொடுத்துள்ளார் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி.

பொங்கல் பரிசு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த ரவி என்பவர் பொங்கலுக்குக் கொடுக்கப்பட்ட இலவசப் பொருள்கள் மற்றும் ஆயிரம் ரூபாயை மாவட்ட வருவாய் அலுவலரிடம் திருப்பிக் கொடுத்தார். அப்போது `நீங்கள் வாங்காமலேயே இருந்திருக்கலாம்?’ என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். `நான் இதை வாங்கிதான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்’ என்றார் ரவி. பிறகு, `நீங்களே அந்தக் கடையில் கொடுத்துவிடுங்க’ என்றார் அந்த அதிகாரி. `நான் கொடுக்க மாட்டேன். நீங்களே அந்த ரேஷன் கடையில் கொடுத்து அரசின் கருவூலத்தில் சேர்த்துவிடுங்கள்’ என்றார் ரவி. இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொங்கல் இலவசப் பொருள்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.

சமூக ஆர்வலர்

இது குறித்து நம்மிடம் பேசிய ரவி, ``தமிழக அரசுக்கு 3,55,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 30,000 கோடி வரி செலுத்துகிறார்கள். இப்படியான சூழலில்தான் பொங்கல் பரிசுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 1000 ரூபாய் ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு 2,250 கோடி ரூபாய்.

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனத் தமிழக அரசுக்குப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் செலவாகும். தடுப்பணை கட்டினால் மழை இல்லாவிட்டாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைவது தடுக்கப்படும். வெளியூருக்குச் செல்வதற்கு போதுமான பேருந்துகள் இல்லை. இந்தச் செலவில் ஆயிரம் பேருந்துகள் வாங்கி இருக்கலாம்.

காஞ்சிபுரத்தில் பட்டு நெவசாளர்களின் கூலி உயரவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருத்த சேதத்தைச் சந்தித்த போது அவசர நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் 2500 கோடி தமிழக அரசு கேட்டது. அப்போது இந்த நிதியைச் செலவு செய்திருக்கலாம். நான் இலவச அரிசியை வாங்குவதில்லை. இலவசங்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இலவச அரிசிக்குப் பதிலாக அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2016 ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்பட்ட இலவசப் பொருள்களை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜனிடம் கொடுத்தேன். அப்போது சொன்ன குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அதனால் இந்தவருடமும் தமிழக அரசு கொடுத்த பொங்கல் இலவசப் பரிசுப் பொருள்களை தமிழக அரசுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறேன்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க