'கொத்துக் கொத்தாகக் காட்சிதரும் தென்னை மரம்' - வியக்கும் ஊர் மக்கள்! | Coconut tree with bunch clusters

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (21/01/2019)

'கொத்துக் கொத்தாகக் காட்சிதரும் தென்னை மரம்' - வியக்கும் ஊர் மக்கள்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் ஊராட்சியில் அமைந்துள்ளது, ஏரிப் புதூர் எனும் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர், விவசாயி சதாசிவம். இவருக்குச் சொந்தமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. இவரின் தோட்டத்தில் அதிகமான தென்னை மரங்களை நட்டிருக்கிறார். அதில் ஒரு தென்னை மரத்தை மட்டும் பொதுமக்கள் அதிசயமாகப் பார்த்துச்செல்கின்றனர். இதுபற்றித் தகவல் தெரிந்து அங்கு சென்றோம்.

தென்னை

இதுகுறித்து விவசாயி சதாசிவத்திடம் பேசினோம், "பொதுவாகத் தென்னை மரத்தில் காய்த்திருக்கும் தேங்காய் மற்றும் குரும்பைகளைப் பார்த்திருப்பீர்கள். அவை சாதாரண தென்னங்குலை போல இருக்கும். என் மரத்தில் அதுபோல இல்லாதது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. இது, நாட்டு ரகத்தைச் சேர்ந்த நீண்ட தென்னைதான். ஒட்டு ரக மரம் இல்லை.

நீளமான ஒரு தண்டு போன்ற அமைப்பு, அதைச் சுற்றிலும் அழகாய் ஒட்டிவைத்ததைப் போன்ற குறும்பைகள் உள்ளன. இதுநாள்வரை காம்புகளுடன்தான் பார்த்திருக்கிறேன். இந்த அமைப்பு சாதாரணமானதா அல்லது அசாதாரணமானதா என எனக்கே தெரியவில்லை. இதுபற்றி கேள்விப்பட்ட மக்கள், இதை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்" என்றார்.

 

தேங்காய்

மேலும், தென்னை மரங்களைப் பற்றி நன்கு அறிந்த அதே ஊரைச் சேர்ந்த சில விவசாயிகளிடம் பேசினோம். "இந்த மரத்துக்கு 'பனங்காய் காய்ச்சி' என கிராமத்தில் பெயர். பனங்காய் போல் கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இந்தப் பெயர். அரிய மருத்துவ குணம் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும் திறன் கொண்டது. இதன் இளநீரின் சுவை நன்றாக இருக்கும். சாதாரணமாக ஆண் பூக்களில் தேங்காய்கள் அதிகம் காய்க்கும். ஆனால், இதில் பல்வேறு பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இது ஓர் அரிய வகைதான். இருந்தாலும் இது சாகுபடிக்கு ஏற்றது கிடையாது" என்றனர்.