தலைக்கு ரூ.3 லட்சம்! கேரளாவில் இருந்து நியூஸிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்களின் கதி என்ன? | 230 Tamil refugees travel Newzealand by boat from Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (21/01/2019)

கடைசி தொடர்பு:16:17 (21/01/2019)

தலைக்கு ரூ.3 லட்சம்! கேரளாவில் இருந்து நியூஸிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்களின் கதி என்ன?

கேரள கடற்கரையில் இருந்து படகுமூலம், தமிழர்கள் உள்ளிட்ட  230 பேர்  நியூஸிலாந்துக்கு அடைக்கலம் தேடிச் சென்றது தெரிய வந்துள்ளது. 

அடைக்கலம் தேடும் அகதிகள்

ஜனவரி 11- ம் தேதி, திருச்சூர் மாவட்டம் கொடுங்கநல்லூர் கோயில் ஒன்றில்  50-க்கும் மேற்பட்ட பைகள் அனாதரவாகக் கிடந்தன. தொடர்ந்து, கொச்சி அருகேயுள்ள முன்னம்பம் கடற்கரைப் பகுதியில், திடீரென்று ஏராளமான பைகள் கிடந்தன.  இதைப் பார்த்த காவல் துறைக்கு, ஏதோ தவறு நடந்துள்ளதாகப் பொறி தட்டியது. விசாரணையில், முன்னம்பம் கடற்கரையில் இருந்து, ஜனவரி 12- ம் தேதி, 100 பெண்கள் குழந்தைகள் உள்பட 230 பேர் 'தேவமாதா' என்ற படகில் நியூஸிலாந்துக்கு  புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. போலீஸ் வந்துவிடுவார்கள் என்கிற பயத்தில், பைகளை அவர்கள் விட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக, டெல்லி அம்பேத்கர் காலனியில் வசித்துவந்த பிரபு ( வயது 29) என்பவரைக் கேரள காவல்துறை கைதுசெய்துள்ளது. விசாரணைக்காக அவரை கொச்சி கொண்டுவந்துள்ளனர்.  படகின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

விசாரணையில் பிரபு கூறியதாவது... '' நியூஸிலாந்து அழைத்துச்செல்ல தலைக்கு ரூ.1.2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வாங்கினோம். எனினும், 19 பேருக்கு படகில் இடம் இல்லாமல் போய்விட்டது. இதற்காகப் பல நாள்கள் திட்டம் போட்டிருந்தோம். நியூஸிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றவர்கள் விமானம் , ரயில், பஸ் மூலம் கொச்சி வந்து பல்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். கொச்சி அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் படகுக்காக 12,000 லிட்டர் டீசல் வாங்கினோம்
தலைக்கு ரூ.3 லட்சம்! கேரளாவில் இருந்து நியூஸிலாந்துக்கு சென்ற தமிழர்களின் கதி?'' என்று கூறியுள்ளார். 

அடைக்கலம் தேடும் தமிழர்கள்

நியூஸிலாந்துக்குப் புறப்பட்ட தமிழர்களின் உறவினர்கள், இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு  ஏற்கெனவே படகில் சென்று அடைக்கலமாகியுள்ளனர்.  அவர்களைப் பின்பற்றி,  இவர்களும் கிளம்பிச் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்காகப் பல நாள்கள் திட்டம் தீட்டி,  கடலோர காவல் படையினர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, நியூஸிலாந்து படகில் புறப்பட்டுள்ளனர். நியூஸிலாந்து நாட்டில் ஆண்டுக்கு 1000 அகதிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதை 1500 - ஆக உயர்த்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, இவர்கள்  பத்திரமாக நியூஸிலாந்து சென்றடைவார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆஸ்திரேலியா,நியூஸிலாந்து  நாடுகள் அகதிகளை ஏற்கவில்லை என்றாலும், சட்டத்துக்கு விரோதமாக அங்கு செல்பவர்களுக்குத் தண்டனை அளிப்பதில்லை. இதனால் உயிரைப் பற்றி கவலைப்படாமல், பல நாட்டு அகதிகள் இந்த நாடுகளுக்குச் செல்கின்றனர். .நியூஸிலாந்துக்கு படகில் புறப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பா.ம.க தலைவர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க