`நாங்க பார்க்காத உலகத்தை எங்க மகன் பார்க்கட்டும்!'- அரசுப் பள்ளி மாணவரின் பெற்றோர் உருக்கம் | Government school student going abroad for education tour

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (21/01/2019)

கடைசி தொடர்பு:17:40 (21/01/2019)

`நாங்க பார்க்காத உலகத்தை எங்க மகன் பார்க்கட்டும்!'- அரசுப் பள்ளி மாணவரின் பெற்றோர் உருக்கம்

சதிஷ்குமாருக்கு நடந்த வழியனுப்பும் விழா

``நாங்க பார்க்காத வெளிநாடுகளை எங்க மகன் பார்க்கப் போறான். அரசுப் பள்ளியில் சிவனேன்னு சேர்த்துவிட்டோம். ஆனா, எங்க மகன் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, இன்னைக்கு ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளுக்குப் போகும் அளவுக்கு முன்னேறி இருக்கான். எங்க நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியால நெறஞ்சுக் கிடக்கு!" என்று கரூர் அரசுப் பள்ளி மாணவர் சதிஷ்குமாரின் பெற்றோர் உருக்கமாகப் பேசினர்.

 சதிஷ்குமார்

தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல், தொழில் நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை மேலை நாடுகளுக்குக் கல்விப் பயணம் அழைத்துச் செல்கிறார்கள். தமிழகத்திலிருந்து 50 மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டு, இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, பின்லாந்தின் ஹெல்சிங்கி நகருக்குச் செல்கின்றனர். அங்கு தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள்,  ஆய்வகங்கள், ரோபோடிக் லேப், அறிவியல் மையங்களை பார்வையிடுகிறார்கள். ஜனவரி 26-ல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்று கலாசார அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார்கள். மேலும், பள்ளிகளில் கற்பிக்கும் முறை அறிதல், மாணவர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 31 சென்னை திரும்புகின்றனர்.

மாணவ விஞ்ஞானிகளுடன் வழிகாட்டி ஆசிரியர் தனபால்

இதில் கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் சதிஷ்குமார் என்ற மாணவர் தேர்வாகியுள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர் தனபால் வழிகாட்டல் மூலம், பள்ளி இளம் விஞ்ஞானிகள் குழுவில் இணைந்து, சூரிய சக்தியில் இயங்கும் நவீன கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல், பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம் ஆகிய கண்டுபிடிப்புகளுடன் ஆய்வுக்கட்டுரையை, பள்ளிக் கல்வித்துறை, தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் நகரம், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்ற மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று முதல் பரிசாக தங்கப் பதக்கம், கோப்பை, பாராட்டுச்சான்று ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

வழியனுப்பும் விழாவில் சதிஷ்குமார் பெற்றோர்

தமது அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்துபடித்து, பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்  அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்  பெற்று தற்போது மேலை நாடுகளுக்குக் கல்விப் பயணமாகப் பின்லாந்து மற்றும் சுவீடனுக்கு இன்று பயணிக்கிறார். அதற்காக, நேற்று இரவு மேலைநாடுகளுக்குக் கல்வி சுற்றுப்பயணம் செல்லும் சதிஷ்குமாருக்கு கரூரில் உள்ள தனியார் விடுதியில் வழியனுப்பும் விழா நடைபெற்றது.  இந்த விழாவில் வெள்ளியணை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதோடு, இந்த நிகழ்வில் பின்லாந்து செல்லும் சதிஷ்குமாரின் தந்தை ரவிச்சந்திரன், தாய் சரோஜா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வழியனுப்பும் விழாவில் சதிஷ்குமார் பெற்றோர்...

அப்போது, பேசிய சதிஷ்குமாரின் பெற்றோர், ``நாங்க அன்றாடம் வேலை செஞ்சுதான் குடும்பத்தை ஓட்டுறோம். என்புள்ளையை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க முடிஞ்சது. அவனை எங்கேயும் கூட்டிப் போனதில்லை. அவனுக்கு நல்லது பொல்லதுன்னு எதையும் வாங்கித் தந்ததில்லை. அவனா படிச்சான். எதைஎதையோ கண்டுபிடிச்சு, இன்னைக்கு வெளிநாடுகளுக்குப் போற அளவுக்கு முன்னேறி இருக்கான். நாங்க பார்க்காக உலகத்தை அவன் பார்க்கட்டும். அவனை பிள்ளையா பெத்ததுக்கு உள்ளம் குளிர்ந்து போயிருக்கிறோம். `இவனை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறோமே'ன்னு ஆரம்பத்துல நினைச்சோம். ஆனா, அரசுப் பள்ளியால் என் மகனை போன்ற மாணவர்களை உருவாக்க முடியும்ன்னு காட்டி, எங்களை வெட்கி தலைகுனிய வச்சுட்டார் ஆசிரியர் தனபால்" என்றார் உருக்கமாக!.