`காதல் கணவரை மீட்டுத் தாருங்கள்!' - திருவாரூர் கலெக்டரிடம் மலேசியப் பெண் கண்ணீர் | malaysian women filed petition to thiruvarur collector

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (21/01/2019)

கடைசி தொடர்பு:15:40 (21/01/2019)

`காதல் கணவரை மீட்டுத் தாருங்கள்!' - திருவாரூர் கலெக்டரிடம் மலேசியப் பெண் கண்ணீர்

தன் காதல் கணவனை மீட்டுத்தரக் கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மலேசியப் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

ராஜ்குமாருடன் திருமணம் செய்துக்கொண்ட மலேசியப் பெண்

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவன ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய  துர்கா தேவி ரமீஸ் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து மூன்று வருடம் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமார், தனது குடும்பத்தினரால் பார்த்துவைக்கப்பட்ட வேறொரு பெண்ணுடன் நேற்று  திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

திருவாரூர் கலெக்டரிடம் புகார் கொடுத்த மலேசியப் பெண்

இதையறிந்த துர்காதேவி ரமீஸ், சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் அளித்துள்ளார். பின்னர் இந்தியா வந்த துர்காதேவி ரமீஸ் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்த திருமண மண்டபத்துக்குள் போலீஸாருடன் நேரில் சென்றுள்ளார். ஆனால், ராஜ்குமார் திருமண மண்டபத்தில் இல்லை. அவரது உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அங்கிருந்தவர்கள் ராஜ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்புடன் மலேசியப் பெண்

இதனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த துர்காதேவி ரமீஸ் தன் கணவனை மீட்டுத்தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் நேரில் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்கா தேவி ரமீஸிடம் கூறியுள்ளார். தொடர்ந்து, இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதற்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் கலெக்டர்.