தாயைத் தேடிவந்து கிணற்றில் விழுந்த குட்டியானை! - மீட்கப் போராடிய வனத்துறை | elephant fell down in agriculture well was recovered by forest personals

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (21/01/2019)

கடைசி தொடர்பு:15:55 (21/01/2019)

தாயைத் தேடிவந்து கிணற்றில் விழுந்த குட்டியானை! - மீட்கப் போராடிய வனத்துறை

நெல்லை மாவட்டம், புளியங்குடி வள்ளமடத்து ஓடைப் பகுதியில் குருசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் குட்டி யானை விழுந்தது. வெளியேற முடியாமல் தவித்த யானையைத் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் 4 மணி நேரமாகப் போராடி மீட்டார்கள். 

கிணற்றில் விழுந்த குட்டி யானை

நெல்லை மாவட்டம், புளியங்குடி வனப்பகுதியையொட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு நெல், வாழை, எலுமிச்சை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் தண்ணீர் மற்றும் இரைக்காகக் காட்டு விலங்குகள் அடிக்கடி வருகின்றன. வன விலங்குகளால் விளை நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக விவசாயிகள் அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக, காட்டு யானைகள் வயல் பகுதிக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். 

இந்த நிலையில், தாயைப் பிரிந்து வனப்பகுதிக்குள் சென்ற குட்டி யானை, அங்குள்ள வயல்பகுதிக்குள் நுழைந்தது. வழிதெரியாமல் தவித்த 4 வயது மதிக்கத்தக்க யானை அங்கும் இங்குமங்குமாகச் சுற்றித் திரிந்தது. பின்னர் எதிர்பாராதவிதமாக வல்லமடத்துஓடைப் பகுதியில் குருசாமி என்பவருக்குச் சொந்தமான கிணற்றுக்குள் அந்த யானை விழுந்துவிட்டது. ஆழமான கிணற்றில் இருந்து வெளியேற வழியில்லாததால் யானை சத்தம் எழுப்பியது. 

கிணற்றில் விழுந்த குட்டி யானை

யானையின் பிளிறல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் காட்டுக்குச் சென்று பார்த்தபோது குட்டி யானையொன்று கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் 4 மணிநேரமாக யானையை வெளியே தூக்கப் போராடினார்கள்.

மீட்கப்பட்ட யானை

நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர், கிணற்றின் சுற்றுச்சுவரை உடைத்து பாதை அமைத்து யானையை வெளியேற்றினார்கள். மீட்கப்பட்ட யானை கிணற்றை விட்டு வெளியில் வந்ததும் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்துக்கு அங்குமிங்குமாக ஓடிய யானைக்குட்டி வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. அதன் பின்னரே அப்பகுதி மக்களும் மீட்புக் குழுவினரும் நிம்மதி அடைந்தார்கள்.