`தம்பிதுரை, தமிழிசை மோதலால் பா.ஜ.க- அ.தி.மு.க உறவு பாதிக்காது!' - இது வைத்திலிங்கம் கணக்கு | BJP and AIADMK will not be affected by the Tamilnadu confrontation, says vaithiyalingam

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (21/01/2019)

கடைசி தொடர்பு:18:20 (21/01/2019)

`தம்பிதுரை, தமிழிசை மோதலால் பா.ஜ.க- அ.தி.மு.க உறவு பாதிக்காது!' - இது வைத்திலிங்கம் கணக்கு

தம்பிதுரைக்கும் தமிழிசைக்கும் நடக்கும் கருத்து மோதல்களால் அ.தி.மு.க, பா.ஜ.க உறவு பாதிக்காது எனக் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது அரியலூர் பொதுக்கூட்டம்.

 எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டார்.
 

 எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்

``கொடநாடு கொலை, கொள்ளையில் தமிழக முதல்வருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க, முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகிறது. கொடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளை தற்போது ஜாமீனில் எடுத்துள்ளவர்கள் யார் என்று கேட்டால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். இதிலிருந்து இப்பிரச்சினைக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பது தெரியும். ராகுல்தான் பிரதமர் எனச் சொல்லிய ஸ்டாலின், தற்போது மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில், தேர்தலுக்குப் பிறகுதான் பிரதமர் யார் எனச் சொல்ல முடியும் எனக் கூறுகிறார். எப்படியாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டுமென நினைத்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்" எனக் குற்றம்சாட்டினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஆவேசமாக பேசிய வைத்திலிங்கம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ``பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அக்கட்சியின் தலைவர் தமிழிசை ஆகியோர் பல்வேறு கருத்துகளைக் கூறலாம். அதேபோல் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறலாம். ஆனால், இந்தக் கருத்துகள் எங்களுக்கிடையே உள்ள நல்லுறவு பாதிக்கும் கருத்துகள் அல்ல. தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்குத் தொடர்ந்து போராடி வருகிறோம். இதனால் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம் என்ற கருத்து அல்ல" என்றார். அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து கேட்டபோது, ``அமைச்சராக உள்ள அவரிடம் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவரை நாடியிருக்கலாம். அப்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவ்வாறு கூறி இருக்கலாம். அது உண்மைதான்" என்றார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய வைத்திலிங்கம்

அ.தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை எனக் கூற தம்பித்துரைக்கு உரிமை இல்லை எனத் தமிழிசை கூறியது குறித்து கேட்டபோது, ``பா.ஜ.க-வின் கூட்டணி குறித்து முடிவு செய்து அக்கட்சியின் தேசிய தலைமைதான். அதனால் தமிழிசை கூறுவதற்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் அறிவித்த உடன் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்" எனக் கூறினார்.