`நெருப்பில் இறங்கிக்கூட முதல்வர் நிரூபிப்பார்!'- ராஜேந்திர பாலாஜி குபீர் | Edappadi palanisamy will get down fire to prove himself says K.T. Rajendra Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (21/01/2019)

கடைசி தொடர்பு:17:03 (21/01/2019)

`நெருப்பில் இறங்கிக்கூட முதல்வர் நிரூபிப்பார்!'- ராஜேந்திர பாலாஜி குபீர்

``கொடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலிலும் இறங்குவார், நெருப்பிலும் இறங்குவார்'' என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திரபாலாஜி

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி சாத்தூர் மற்றும் சிவகாசியில் இன்று நடைபெற்றது. சாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக துணை முதல்வர் அறையில் யாகம் நடந்ததை யார் பார்த்தது.  துணை முதல்வர் தன்னுடைய அறையில் சாமிதான் கும்பிட்டார். கொடநாடு விவகாரத்தில் தி.மு.க-தான் பின்புலமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலிலும் இறங்குவார். நெருப்பிலும்கூட இறங்கி வருவார். கொடநாடு விவகாரத்தில் முதல்வருக்கு எந்த பயமும் இல்லை.

தேர்தல் களத்தில் இருக்கப்போவது அ.தி.மு.க மற்றும் தி.மு.க-தான். மற்ற கட்சிகள் எதுவும் தேர்தல் களத்திலேயே இல்லை. பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் நிறையும் உண்டு. குறையும் உண்டு. ஆனால் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அ.தி.மு.க-வின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிவித்தார்.