`முதலீட்டாளர்களுக்கு எப்படி நிலத்தை வழங்குவீர்கள்?’- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி! | madras High court questioned Tn Government

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:19:00 (21/01/2019)

`முதலீட்டாளர்களுக்கு எப்படி நிலத்தை வழங்குவீர்கள்?’- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்


நாளை மறுநாள் சென்னையில் தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும், குற்றப் பின்னணி உடைய தனியார் நிறுவனங்கள் பங்குபெற தடை விதிக்கக் கோரி காஸ்கேட் தனியார் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயண மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய நாராயண், ``கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 92 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி 68 ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் மொத்தம் 2.47 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு

மேலும் இந்தாண்டு 23 கோடி ரூபாயில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்குபெற 2,900 நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருப்பதாகவும், 5,000 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், 260 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து 2.55 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்குபெற வரும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் தங்க அரசு ஏற்பாடு செய்துள்ளதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, தங்கும் விடுதி செலவை அரசு ஏற்காது என்றும் முதலீட்டை ஈர்ப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்றும் இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் அரசு தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படாத நிலையில், முதலீட்டாளர்களுக்கு எப்படி நிலங்களை ஒதுக்குவீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிற மாநிலங்களில் முதலீட்டாளர்களுக்கு ஒரு சென்ட் நிலம் ஒரு ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.