கைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை!  | Abandoned bull raised by village youth wins award in Alanganallur jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (21/01/2019)

கடைசி தொடர்பு:11:37 (22/01/2019)

கைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை! 

லங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் காளையர்களை விரட்டியடித்த பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் காளையை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வாடிவாசலை விட்டு வெளியே வரும் காளைகள் மிரண்டு ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். ஆனால், செல்லியம்மன் கோயில் காளை வாடிவாசலை விட்டு வெளியே வந்ததுமே காளையர்களை புரட்டி எடுக்கத் தொடங்கியது.  ஐயய்யோ... இந்த காளையா' என்று பதறியவாறே காளையர்கள் ஓடியதைக் காண முடிந்தது. இதுவரைக்கும் 15 ஜல்லிக்கட்டுகளில் வெற்றி பெற்றுள்ள செல்லியம்மன் கோயில் காளையின் வாழ்க்கை சோகமும் அவமானங்களும் நிறைந்தது. 

ஜல்லிக்கட்டுக் காளை செல்லியம்மா

நான்கு ஆண்டுகளுக்கு முன் தாயால் கைவிடப்பட்டுச் சோர்வாக வந்து செல்லியம்மன் கோயில் வாசல் அருகே செல்லியம்மா படுத்துக் கிடந்தது.  இளைஞர்கள் சிலர்  கன்றுவின் சோர்வான முகத்தைக் கண்டு உணவு, தண்ணீர் அளித்தனர். பின்னர், கன்றை  என்ன செய்யலாம் யோசித்துள்ளனர். செல்லியம்மன் கோயிலில் வளர்க்க முடிவெடுத்து 'செல்லியம்மா' என்ற பெயரை சூட்டினர். பரம்புப்பட்டி கோயில் காளையாக மாறியது செல்லியம்மா. 

இதற்கு ஜல்லிக்கட்டுக் காளைக்கான பயிற்சி கொடுப்பதை ஊர் பெரியவர்கள் விரும்பவில்லை. தினேஷ் என்ற 21 வயது இளைஞர்தான் முதன் முதலில் செல்லியம்மாவுக்கு ஜல்லிக்கட்டு காளைக்கான பயிற்சி அளித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக செல்லியம்மா ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில்  தோல்வியடைய, ஊர் பெரியவர்கள் இளைஞர்களையும் செல்லியம்மாவையும் கேலி செய்துள்ளனர். 'போய்... பொழப்ப பாருங்கப்பா இதைப் போட்டு கட்டி அழாதீங்க ' என்று  வார்த்தைகளால் புண் படுத்தினர். 

ஜல்லிக்கட்டில் செல்லியம்மா

தினேஷ் சளைக்கவில்லை. முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு செல்லியம்மாவை ஓர் ஆண்டுக் காலம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்லவில்லை. அதே நேரத்தில் பயிற்சி மட்டும் தொடர்ந்து அளித்து வந்தனர். சனி, ஞாயிறுகளில்  தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்பட்டது. மீண்டும் 2017-ம் ஆண்டுதான் செல்லியம்மாவை இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் சென்றனர்.  உழைத்த உழைப்புக்கு இந்த முறை பலன் கிடைத்தது. களத்தில் செல்லியம்மா காளையர்களைச் சொல்லி அடித்தது. சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடியது. கடந்த இரு ஆண்டுகளில் 15 ஜல்லிக்கட்டுகளில் செல்லியம்மா வெற்றி பெற்றுள்ளது. அலங்காநல்லூரில் வென்றது இதுதான் முதன்முறை 

செல்லியம்மாவுக்குப் பயிற்சி அளித்தவர்களில் ஒருவரான சரவணகுமார் கூறுகையில், ``ஜல்லிக்கட்டுகளில் எங்கள் பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் பெயரில்தான் காளையின் பெயரை பதிவு செய்வோம். தற்போது, பரம்புப்பட்டிக்கே இந்தக் காளையால் பெருமை. இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான விருதைப் பெற்றதோடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த காரையும் பரிசாகத் தட்டி வந்துள்ளது '' என்று பெருமிதத்துடன் கூறுகிறார். 

கேலி செய்தவர்கள் செல்லியம்மாவால் எங்கள் ஊருக்கே பெருமை என்று இப்போது கொண்டாடுகிறார்கள். தோல்விகளும் அவமானங்களும்தான் வெற்றிக்கான முதல்படி என்று செல்லியம்மாவின் வெற்றி சொல்லாமல் சொல்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க