முத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன் | TTV Dinakaran made mistake in paramakudi campaign

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (21/01/2019)

கடைசி தொடர்பு:17:56 (21/01/2019)

முத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தினகரன், தன்னால் பதவியிழந்த டாக்டர் முத்தையா பெயரை குறிப்பிடுவதற்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான டாக்டர் சுந்தர்ராஜனின் பெயரைக் கூற முயன்று பின்னர் பின்வாங்கிச் சமாளித்தார்.

பரமக்குடியில் சுற்றுப்பயணம் செய்த தினகரன்
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில்  அதன் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பார்த்திபனூரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய தினகரன் மண்டலமாணிக்கம், அபிராமம், செய்யாமங்களம், புதுக்குடி பாம்பூர், வேந்தோணி உள்ளிட்ட ஊர்களில் வேனில் இருந்தபடியே அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசினார். அப்போது, துரோகிகள் ஆட்சியை வீழ்த்தி அம்மாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம். துரோகிகளின் பின்னால் செல்லாமல் தியாகத்தின் பக்கம் துணை நின்றதால் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்'' எனப் பேசினார்.

டாக்டர் முத்தையா எனக் கூறுவதற்குப் பதிலாக டாக்டர் சுந்தர்ராஜனின் பெயரை பாதிவரை உச்சரித்துவிட்டுப் பின்னர் திணறியபடி டாக்டர் முத்தையா எனத் திருத்திப் பேசினார். இதனால் பிரசார வேனில் தினகரனின் அருகில் நின்றுகொண்டிருந்த டாக்டர் முத்தையா உள்ளிட்ட அ.ம.மு.க-வினர் சங்கடத்தால் நெளிந்தனர்.

பரமக்குடியில் தினகரன் பிரசாரம் 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரமக்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார் தினகரன். அப்போதும்கூட டாக்டர் முத்தையா என்பதற்குப் பதிலாக டாக்டர் சுந்தர்ராஜன் என முன்னாள் அமைச்சரின் பெயரை சொல்லி ஆதரிக்குமாறு பேசினார். கீழே இருந்த தொண்டர்கள் `டாக்டர் முத்தையா' எனத் திரும்ப திரும்பக் குரல் எழுப்பியதால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தான் முத்தையா என்றுதான் கூறினேன் எனச் சொல்லி சமாளித்தார்.

தினகரன் பரமக்குடி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் தன்னால் பதவியிழந்த டாக்டர் முத்தையாவுக்குப் பதில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவருமான டாக்டர் சுந்தர்ராஜன் பெயரையே உச்சரிக்க முயன்று திணறி வருவது அவரது கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியது.