`ஆயிரத்தெட்டு குறை சொல்றாங்க அதிகாரிகள்! - ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் கிராம மக்கள் | Villagers complaints about officials in Jallikattu program

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (21/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (21/01/2019)

`ஆயிரத்தெட்டு குறை சொல்றாங்க அதிகாரிகள்! - ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் கிராம மக்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராமமக்கள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் கிராம மக்கள்

அரியலூர் மாவட்டம், கீழக்கொளத்தூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இதேபோல இந்த வருடமும் தைப்பூசத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வழங்கக்கோரி கடிதம் கொடுத்திருந்தனர். அனுமதி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கிராமத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி, பேரிகார்டு அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், இதை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தனர்.

                                            ஜல்லிக்கட்டு அனுமதிக்கக் கோரி கறுப்புக்கொடி ஏற்றிய கிராமமக்கள்

 

ஜல்லிக்கட்டு நடத்த ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராமங்களில் தெருக்கள், வீடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்த அமைக்கப்பட்ட வாடிவாசல் பகுதிகளில் கறுப்புக்கொடிகளை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டம் நடத்தும் கிராம மக்கள்

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் சிலரிடம் பேசினோம். ``நாங்கள் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது வழக்கம். இந்த வருடம் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி கொடுக்காததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி கேட்டால் சரிவர கொடுப்பதில்லை. அப்படி அனுமதித்தாலும் மருத்துவக்குழு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆயிரத்தெட்டுக் குறைகளைச் சொல்லி போட்டி நடத்தவிடாமல் செய்துசெய்கிறார்கள்.

கையில் கறுப்புக்கொடியுடன் கிராம மக்கள்

அதேபோல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தினால் அதிகாரிகள், காவலர்களுக்கு தான் தலைவழி என்பதால் முடிந்த அளவுக்கு தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்கள். இதனால்தான் பல கிராமங்களில் மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் கொடுக்கும் குடைச்சலால் நாங்கள் ஏன் போட்டியை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. நீங்கள் அனுமதி வழங்க வேண்டும் இல்லையேல் பழையபடி அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தவேண்டியிருக்கும்" என்று எச்சரித்தனர் விழாக் குழுவினர்.