சேலத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கும் எட்டு வழிச் சாலை...! | Central government grants permission for Tuticorin eight way road scheme

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (21/01/2019)

கடைசி தொடர்பு:18:38 (21/01/2019)

சேலத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கும் எட்டு வழிச் சாலை...!

தற்போது சென்னையிலிருந்து தூத்துக்குடிவரையிலான எட்டு வழிச் சாலையான அமைப்பதற்கு, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலத்தைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கும் எட்டு வழிச் சாலை...!

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு எட்டு வழிச் சாலை அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இந்தத்  திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தமிழக அரசின் அதிரடியான இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்துப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பாதிப்புக்குள்ளான விவசாய மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பல்வேறு பகுதிகளிலும் இந்த எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. 

பசுமை வழிச் சாலை

இந்த நிலையில் ஸ்டெர்லைட் உலோக ஆலையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக, மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் பாதிக்கப்படுவதால் இந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் தொடங்கிய நூறாவது நாளில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்குப் பேரணியாகச் சென்றவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வுகள் நடந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே, அடுத்த அதிரடி திட்டமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிவரை 13,200 கோடி ரூபாய் செலவில் எட்டு வழிச் சாலை அமைப்பதற்கான புதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தூத்துக்குடி வரை அமைக்கப்பட உள்ள இந்தப் எட்டு வழிச் சாலையானது, சென்னையிலிருந்து விழுப்புரம் வரை பத்து வழிச் சாலையாகவும், விழுப்புரத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர் வரை எட்டுச் சாலையாகவும், அங்கிருந்து தூத்துக்குடிவரை ஆறு வழிச் சாலையாகவும் அமைய  உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. `இந்தப் புதிய எட்டு வழிச் சாலை அமைப்பதன் மூலம் சென்னை - தூத்துக்குடி இடையே 100 கி.மீ பயண தூரத்தைக் குறைக்க முடியும்' என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம்

சேலம் எட்டு வழிச் சாலை அமைய உள்ள தூரம் 277 கிலோ மீட்டர் ஆகும். சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்குப் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும், கனிம வளங்கள் நிறைந்த மலைகளும் சீர்குலைவுக்கு உள்ளாக்கப்பட உள்ளன. இந்நிலையில், தற்போது சென்னையிலிருந்து தூத்துக்குடிவரையிலான எட்டு வழிச் சாலையான அமைப்பதற்கு, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பெருமளவு விவசாயப் பணிகள், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நிலையில், அந்த மாவட்டங்களிலும் விவசாயத்தை ஒழிக்கும் செயலாகவே இது இருக்கும்.

ஏற்கெனவே, டெல்டா பகுதி மாவட்டங்களில் அடங்கிய காவிரிப் படுகைகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக, அந்தப் பகுதி மக்கள், பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடிவரை எட்டு வழிச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டால், இந்தத் திட்டம் அமைய உள்ள மாவட்டங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். தாங்கள் நம்பி இருக்கிற விவசாய நிலங்களை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறார்கள் டெல்டா விவசாயிகள். 

ஸ்டெர்லைட் போராட்டம்

இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் கிரேஸ் பானுவிடம் பேசியபோது, ``ஜனவரி 23-ம் தேதி சென்னையில் தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுப் பல்வேறு திட்டங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சில, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட கனிம வளங்கள் நிறைந்த சில மாவட்டங்களில் அதிக முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளன. நிச்சயமாக அவற்றின் நோக்கம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் இயற்கை வளங்களை அழிப்பதுதான்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள், ஏற்கெனவே போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது புதிய பிரச்னை எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திலும், துப்பாக்கிச் சூட்டிலும் பல உயிர்களை இழந்துள்ளோம், ஸ்டெர்லைட் குறித்த விஷயத்தில் நிலையான ஒரு முடிவைத் தமிழக அரசு எடுக்காத நிலையில் மக்கள் விரும்பாத புதிய திட்டங்களைக் கொண்டுவருவது மக்கள் விரோதச் செயலாகும். எட்டு வழிச் சாலை மாதிரியான ஒரு திட்டத்தைக் கொண்டுவரும் முன், அந்தத் திட்டத்தினால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது மாதிரியான திட்டங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக அரசால் செய்துதரக் கூடியவை. இவற்றால் அந்த மண்ணின் மக்கள் எந்த வகையிலும் பயனடையப் போவதில்லை" என்றார்.

புதிய திட்டங்கள் என்பது மக்களுக்கா, அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் பலனடைவதற்கா என்பதைத் தமிழக அரசு சிந்தித்துப் பார்த்துச் செயலாற்ற வேண்டும் என்பதே சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கோரிக்கை. இதுபோன்ற விஷயத்தில் பொதுமக்களின் விருப்பங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்