சினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை! - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள் | chennai rowdy murder in public road

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (21/01/2019)

கடைசி தொடர்பு:18:28 (21/01/2019)

சினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை! - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்

கொலை செய்யப்பட்ட ரவுடி குமரேசன்


சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் சினிமாவைப் போல ஓட ஓட பிரபல ரவுடியை மர்மக்கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் இன்று காலை 11 மணி அளவில் பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை மர்மக் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. பரபரப்பாக காணப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் சிலர் இந்தச் சம்பவத்தை சினிமா படஷூட்டிங் என
முதலில் கருதினர். அதன்பிறகுதான் அது நிஜம் என தெரிந்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தலைதெறிக்க அலறியடித்து ஓடினர். 

மர்மக் கும்பலிடமிருந்து தப்பிக்க பைக்கில் வந்த வாலிபர் பூந்தமல்லி சாலையில் ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை மர்மக் கும்பல் விடாமல் துரத்தியது. ஒருகட்டத்தில் மர்மக்கும்பலின் கொலை வெறித் தாக்குதலில் சிக்கிய அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்தார். கீழே விழுந்த அவர் உயிருக்குப் போராடினார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்துவந்து வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றினர். பிறகு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

கொலை குறித்து தகவலறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் குமரேசன் என்றும் பிரபல ரவுடி என்றும் தெரியவந்தது. 

 கொலை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,`` குமரேசன் மீது சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காகத்தான் குமரேசன் இன்று நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். குமரேசனைக் கொலை செய்தவர்கள் யார், யார் என்று அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்துவருகிறோம்.  எங்களின் முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாகத்தான் இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் குமரேசனை கொலை செய்தவர்களை கைது செய்வோம்" என்றனர். 

கொலை

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சூளைமேடு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த குமரேசன் மீது ராமாவரத்தில் யுவராஜ் என்பவரைக் கொலை செய்த வழக்கு, மடிப்பாக்கத்தில் டாக்டர் ராஜேஷ் என்பவரைக் கொலை செய்த வழக்கு என சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது சூளைமேடு போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் சரித்திரப் பதிவேடு உள்ளது. `ஸ்கெட்ச்' போட்டு குமரேசனை அவரின் எதிரிகள் கொலை செய்துள்ளனர். பூந்தமல்லி சாலையில் சமீபத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் கொலை நடந்த சம்பவம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதன்மூலம் கொலையாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார். 

ரவுடி குமரேசன் குறித்து அவரின் ஆதரவாளர்கள் கூறுகையில், ``குமரேசன் ரொம்பவே தைரியமானவர். இதற்கு முன் அவரை பல தடவை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஆனால், அதிலிருந்து தப்பிய அவர், இன்று சிக்கிக்கொண்டார். அவரின் உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் இருக்கும். பலரை சமாளிக்கும் பலசாலியான குமரேசனை நடுரோட்டில் வைத்துக் கொலை செய்துவிட்டனர். தனக்கென்று தனிராஜ்ஜியம் நடத்தியவர் குமரேசன்" என்றனர். 

பட்டப்பகலில் சென்னையில் ரவுடி ஒருவரை சர்வசாதாரணமாக ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.