`நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க ஆய்வு தேவை’ - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்! | Research should be must for Nlc third Tunnel Gateway says Tamil Nadu Science Movement

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (21/01/2019)

கடைசி தொடர்பு:21:45 (21/01/2019)

`நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைக்க ஆய்வு தேவை’ - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்!

நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான தேவை குறித்தும் தமிழகத்தின் மின் தேவை  குறித்தும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ராமேஸ்வரத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா தலைமையில் நடந்தது.  மாவட்டச் செயலாளர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர்  நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்த இந்தக் கூட்டத்தில் மாநில செயல்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர் அமலராஜன்  அறிக்கையளித்தார்.  `மக்கள் அறிவியல் இயக்கங்களின் தேவை, செயல்பாடுகள் குறித்து எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்துரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட். 9,10,11 தேதிகளில் திருப்பூரில் நடத்துவது. பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினத்தன்று 1000 இடங்களில் அறிவியல் செயல்பாடுகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், பாரம்பர்யமிக்க ராமேஸ்வரத்தில் அனைவருக்கும் உயர்கல்வி கிடைத்திட தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். தனுஷ்கோடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீனவர்களின் வருடம் முழுவதற்குமான வாழ்வாதாரத்துக்கு மிக அடிப்படையாக உள்ள நிலையில், அங்குள்ள  மீனவ மக்களை அப்புறப்படுத்தாமல் அவர்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை இருப்பிட வசதிகள் அமைத்துத் தர வேண்டும்.

நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைக்க என்.எல்.சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இதைச் சுற்றியுள்ள 26 கிராமங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான தேவை, தமிழகத்தின் மின் தேவை ஆகியவற்றுடன் இப்பகுதிகளில் உள்ள உண்மைநிலை குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் சுப்பிரமணி மற்றும் ராமேஸ்வரம் அறிவியல் இயக்க கிளை நிர்வாகிகள் செந்தில் குமார், சசிகுமார்,  ஜெரோம், சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.