விருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்! | Naam tamilar party filed complaint against sand theft

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (22/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (22/01/2019)

விருதுநகர் அருகே ஆற்றுமணல் திருட்டு - கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார்!

திருச்சுழி பகுதியில் சவடுமண் என்ற பெயரில் அதிகாரிகள் துணையுடன் சட்டவிரோதமாக ஆற்றுமணல் திருட்டு நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாம் தமிழர்

விருதுநகர் மாவட்டத்தின் கடைக்கோடியில் திருச்சுழி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அதிகாரிகள் துணையுடன் ஆற்றுமணல் அள்ளப்படுவதாகவும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மணல் திருட்டை தடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் திருச்சுழி தொகுதி பொறுப்பாளர் க.பழனிச்சாமி கூறும்போது, ``திருச்சுழி பகுதியில் குண்டாற்றில் சவடுமண் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 40 அடி பள்ளத்துக்கு ஆற்றுமணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பல அடிக்கும் கீழே சென்று விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், திருச்சுழி வட்டாட்சியர், காவல் நிலையம் என எல்லா இடத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை மணல் திருட்டை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருச்சுழி, காரியாபட்டி வட்டாட்சியர்கள் இந்தக் கொள்ளைக்கு துணையாக உள்ளனர். எனவே, மணல் கொள்ளையைத் தடுத்து மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரணியில் உள்ள விவசாய நிலங்களில் சுண்ணாம்புக் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதையும் சரிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.