`கந்துவட்டிப் புகார் மீது நடவடிக்கை இல்லை!' - புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி | Youngster suicide attempt in district collector office

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:08:55 (22/01/2019)

`கந்துவட்டிப் புகார் மீது நடவடிக்கை இல்லை!' - புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி பிரச்னை குறித்து கொடுத்த புகார் மனுவினைத் திருப்புனவாசல் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே பேரானூரைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வீரசேகர்(23). கையில் பெட்ரோல் கேனுடனும், மனுவுடனும் கலெக்டர் அலுவலகம் வந்த வீரசேகர் தன் மீது பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை மீட்டு இழுத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரித்த திருக்கோகர்ணம் போலீஸார், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்று தீக்குளிக்க முயற்சி செய்யக் கூடாது என்று இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.

அவரின் மனுவில், ``எனது அப்பா முத்து, திருப்புனவாசலைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் 4 வருடங்களுக்கு முன்பு விவசாயம் செய்வதற்காக, ரூ.1 லட்சம் வரையிலும் வட்டிக்குக் கடன் வாங்கினார். விவசாயம் பொய்த்துப் போனதால், அதை அப்பாவால் சரியாகக் கட்டமுடியவில்லை. மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என அதிக வட்டி வசூலித்தனர். ஒரு கட்டத்தில் எங்களால் வட்டியைக் கூட கட்டமுடியவில்லை. கால அவகாசம் கேட்டோம். உடனடியாக அசல் மற்றும் வட்டியைக் கட்டச் சொல்லி கடுமையான நெருக்கடி கொடுத்தனர். இந்த நிலையில்தான் கந்துவட்டி குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இரு தரப்பும் பேசி கடனைக்கட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான், கடந்த 19 -ம் தேதி கடன் கொடுத்தவரின் மகன் மற்றும் மாப்பிள்ளை இருவரும் எதற்காகப் புகார் கொடுத்தீர்கள் உடனே பணம் வேண்டும் என்று மிரட்டினர்.

பணத்தைத் தற்போது கொடுக்க முடியாது. விரைவில் தந்துவிடுகிறோம் என்று கூறிய அப்பாவின் மண்டையை உடைத்தனர். அக்காவை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தனர். பாட்டிக்கும் கையில் காயம். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். குடும்பமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மேலும், எங்கள் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, பணத்தையும் எடுத்துச்சென்று விட்டனர். இதுகுறித்து திருப்புனவாசல் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எங்கள் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கேட்க எங்களுக்கு வேறு நாதியில்லை. என்னிடம் அவர்களை தட்டிக்கேக்க வழியில்லாததால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை. எனது குடும்பத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி கேட்டு மிரட்டும் அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் தெரிவித்து இருந்தார். இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்வபத்தை தொடர்ந்து, பொதுமக்கள் கடுமையாக சோதனைகளுக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.