`கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு!’ - மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு | 'Give the money for the land acquired!' -young man attempted suicide

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (22/01/2019)

கடைசி தொடர்பு:08:46 (22/01/2019)

`கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கொடு!’ - மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரால் வேலூரில் பரபரப்பு

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர், திடீரென மரத்தின் உச்சியில் ஏறி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்த வாலிபர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனந்தோப்பு கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் நூருல்லா (35). இவர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக தன்னுடைய குடும்பத்துடன் வந்தார். அப்போது அவர், திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் ஏறி, கையில் வைத்திருந்த விஷ பாட்டிலைக் காட்டி தற்கொலை மிரட்டல் விடுத்தார். பொதுமக்களும், அதிகாரிகளும் மரத்தடியில் திரண்டு கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். `என்னை மீட்க முயன்றால் கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்று கூறிய நூருல்லா, அடுத்த நொடியில் விஷத்தைக் குடித்தார். இதுபற்றித் தகவலறிந்ததும் விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத் துறையினர், போலீஸ் உதவியுடன் மரத்தில் ஏறி நூருல்லாவை கயிறு கட்டிக் கீழே கொண்டு வந்தனர்.

மரத்தின் உச்சியில் வாலிபர்

108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பிறகு, நூருல்லா நலமுடன் இருக்கிறார். இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, ``கீழ் முருங்கைக் கிராமத்தில் உள்ள 7  ஏக்கரிலான அரசு புறம்போக்கு நிலத்தை நூருல்லாவின் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலத்தைக் கையகப்படுத்திய அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரிசி குடோன் கட்டினர். நிலத்தைப் பயன்படுத்தி வந்த நூருல்லாவின் குடும்பத்தினர், கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை கேட்டனர். இழப்பீட்டுத் தொகை தரப்படவில்லை. இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் பல வருடங்களாக மனு அளித்து வருகிறார்கள். 

மரத்தின் உச்சியில் வாலிபர்

மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் விரக்தியடைந்த நூருல்லா தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. நூருல்லாவின் குடும்பத்தினர் கூறுகையில், ``நாங்கள் பயன்படுத்தி வந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் இல்லை. பட்டா நிலம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டா எரிந்துவிட்டது. எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.