திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கணவரை மீட்டுத்தரக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா! | Women protest at tirupur collector office

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (22/01/2019)

கடைசி தொடர்பு:08:46 (22/01/2019)

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் கணவரை மீட்டுத்தரக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா!

திருப்பூர் அருகே, மூன்று குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு, இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரது மனைவி சாந்தி. இத்தம்பதிக்கு 1 ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அழகுராஜா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சிலிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, தனியார் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்த நிலையில், அழகுராஜாவுக்கு ரத்தப் பரிசோதனை மையத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவருடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார்.  இதையறிந்த அழகுராஜாவின் மனைவி சாந்தி, தனது கணவரை கண்டித்ததோடு,அவருடன் பழகிவந்த அப்பெண்ணையும் எச்சரித்திருக்கிறார். இதற்கிடையே, கணவர் அழகுராஜா தனது நகை, பணம் மற்றும் சில சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு தலைமறைவானதாகவும், அத்துடன் அவர் பழகிவந்த பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டதாகவும்,  திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சாந்தி.

ஆனால் அழகுராஜா தொடர்ந்து விலகியே இருந்ததால், வேதனையடைந்த சாந்தி, தனது மூன்று குழந்தைகளுடன் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன், தன்னுடைய கணவர் அழகுராஜாவை தன்னிடம் மீட்டுத் தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்திருக்கிறார்.

குழந்தைகளுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.