ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்டுக்குட்டியுடன் மனு கொடுக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்! | Hindhu makkal katchi district president came to the collector office with goat

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (22/01/2019)

கடைசி தொடர்பு:08:28 (22/01/2019)

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆட்டுக்குட்டியுடன் மனு கொடுக்க வந்த இந்து மக்கள் கட்சியினர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு ஆட்டுக்குட்டியுடன் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுக்க வந்தனர்.

ஆட்டுக்குட்டியுடன் வந்த கட்சியினர்

`தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் தைப்பூச விழாவினை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். வள்ளலார் ஜோதி நாளில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என ஆட்டுக்குட்டியுடன் இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவர் பிரகாஷ், நிர்வாகிகளுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவர் பிரகாஷிடம் பேசினோம். ``எந்த ஜீவனையும் துன்புறுத்தக் கூடாது என்ற ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று ஒரு பயிருக்குக் கூடப் பரிதாபப்பட்ட வள்ளலார் ஜோதியான நாளில் கூட அனைத்து இறைச்சிக் கடைகளையும் திறந்து வைப்பது சரிதானா?... இனி வள்ளலார் ஜோதி நாளில் தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும், வள்ளலார் ஜோதியான வடலூரைப் புனித நகரமாக அரசு அறிவிக்க வேண்டும். சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடுகிறார்கள். ஆனால், நம் மண்ணுக்குச் சொந்தமான தமிழ்க்கடவுள் முருகனுக்கு, தைப்பூசம் தினத்தன்று தமிழகத்தில் விடுமுறை விடப்படுவதில்லை. எனவே, தைப்பூசத்திற்கு அரசு விடுமுறையளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.