``தான் 62 -வது வயதில்தான் சபரிமலை சென்றதாகவும், ஆதார் கார்டில் உள்ள தவற்றால் தனது பெயர் 50 வயதுக்கும் குறைவான பெண்கள் பட்டியலில் உள்ளது. அதனால், அதை நீக்க வேண்டும் என திருவண்ணாமலையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கேரள அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, சபரிமலைக்குச் செல்ல ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு சமர்ப்பித்து முன் பதிவு செய்யவேண்டும் என்ற நிலையில், 7,564 பெண்கள் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலையில் தரிசிக்கக் கூடாது என்று பல போராட்டங்களை நடத்திவருகிறனர்.
இந்த நிலையில், 10 வயது முதல் 50 வயது வரையிலான 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பட்டியல் ஒன்றைக் கடந்த ஜனவரி 18 -ம் தேதி தாக்கல்செய்தது. கேரள அரசு தாக்கல்செய்த அறிக்கையில், பல குளறுபடிகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், 51 பெண்களில் 62 வயது உடைய மூதாட்டியை 48 வயது என்று குறிப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குளறுபடிக்கு முக்கியக் காரணமே ஆதார் கார்டுதான் என்கிறார் அந்த மூதாட்டி.
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. இவர், 1956 -ம் வருடம் பிறந்தவர். இவருக்கு தற்போது வயது 62. இவருடைய ஆதார் அட்டையில் 30.6.1970-ம் ஆண்டு பிறந்ததாகப் பதிவாகி உள்ளது. அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்து சந்திரா இதுவரை பிறந்த ஆண்டை மாற்றாமல் விட்டுவிட்டார். இதுவே இவருக்கு இப்போது சிக்கலானது. இவர், தனது 54 -வது வயதில் இருந்து தொடர்ந்து எட்டு வருடங்களாக சபரிமலைக்குச் சென்றுவந்துள்ளார்.
ஐம்பது வயதிற்கு மேல் ஆனவர் என்பதால் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சந்திராவின் ஊரில் உள்ள சங்கர் என்ற குருசாமியின் தலைமையில் 3 பெண்கள் உட்பட 20 பேர் கொண்ட குழு தொடர்ந்து எட்டு வருடங்களாக சபரிமலைக்குச் சென்றுவருகின்றனர். இவர்கள் சென்று வருவதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில், இந்த வருடம் ஆதார் அட்டையைக் கொண்டு முன்பதிவு செய்துள்ளார். அப்படி முன்பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையில், 1970 -ம் வருடம் பிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளதால், சந்திராவுக்கு 48 வயது என கணக்கில் வருகிறது.
இந்த ஆதார் கார்டில் உள்ள வயதை கணக்கில் எடுத்துக்கொண்டு, 50 வயதிற்குக் கீழ் உள்ள பெண்களை கோயிலில் அனுமதித்ததாகக் கூறப்படும் 51 பெண்களின் பட்டியலில் சந்திராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சந்திரா கூறுகையில், "எனக்கு 62 வயதாகிறது. 54 வயதிற்குப் பிறகுதான் நான் அய்யப்பனைக் காணவே சென்றேன். தொடர்ந்து 8 வருடங்களாகச் சென்றுவருகிறேன். 50 வயதிற்குக் கீழ் உள்ள பெண்ணாக நான் அங்கு செல்லவில்லை. என்னுடைய பெயர், பட்டியலில் சேர்க்கப்பட்டது தவறு. ஆதார் ஒன்றை மட்டுமே வைத்து கேரள அரசு பட்டியல் தயாரித்திருக்கக் கூடாது. என்னுடைய வோட்டர் ஐடி-யில் பாருங்கள் என் உண்மையான வயது இருக்கிறது” என்று காண்பித்தார்.
மேலும், பல இடங்களில் ஆதார் கார்டில் குளறுபடி இருக்கிறது அதை அரசு சரிசெய்ய வேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் வரும் இடத்தில், ஆதார் கார்டு மட்டும் இல்லாமல் வோட்டர் ஐடியையும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.
