பட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன்! - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் | The boy's swallowed thread was successfully removed in Virudhachalam

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (22/01/2019)

கடைசி தொடர்பு:11:51 (22/01/2019)

பட்டம் விடும் நூலை விழுங்கிய சிறுவன்! - திறம்பட சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்

கடலூர் மாவட்டம் விருத்சாலத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல்.  ஐந்தாம் வகுப்பு மாணவரான இவர், காணும் பொங்கல் அன்று தனது பெற்றோர்களுடன் மணிமுத்தாறுக்குச் சென்றுள்ளார்.

சிறுவன் வெற்றிவேல்

பின்னர்,  சக நண்பர்களுடன் பட்டம் விட்டு விளையாடியுள்ளார். அப்போது, பட்டத்திற்கான நூல்கண்டை வாயில் வைத்தபடி
விளையாடியபோது எதிர்பாராத விதமாக நூல்கண்டு நழுவி தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
  இதையறிந்து பயந்த வெற்றிவேல், இது குறித்து யாரிடமும்  கூறவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாகச் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அடிக்கடி வாந்தியும் எடுத்துள்ளார். அதைப் பார்த்த பெற்றோர், உடனடியாக  அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு காது, மூக்கு, தொண்டை நல டாக்டர் ராஜ்குமார், சிறுவனைப் பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுவனின் தொண்டைப் பகுதியில் நூல் போன்று இருப்பது தெரியவந்தது.

வெற்றிவேல்

அதை மெதுவாக எடுத்தபோது, அது நீண்டுகொண்டே வந்துள்ளது.  பிறகு, மருத்துவக் குழுவினர் உதவியுடன் டாக்டர் ராஜ்குமார்,
சிறுவன் வயிற்றில் இருந்த நூல்கண்டு முழுவதையும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். பின்னர், சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை
அளிக்கப்பட்டு, பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சிறுவனுக்கு திறம்பட சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜ்குமார் மற்றும் மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் பாராட்டினார்.